விருதுநகர்
மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு ஆணை
|சிவகாசியில் மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு ஆணைகளை அசோகன் எம்.எல்.ஏ., மேயர் சங்கீதா இன்பம் ஆகியோா் வழங்கினர்.
சிவகாசி,
சிவகாசியில் மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு ஆணைகளை அசோகன் எம்.எல்.ஏ., மேயர் சங்கீதா இன்பம் ஆகியோா் வழங்கினர்.
பயனாளிகளுக்கு ஆணை
மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்த நிலையில் மின் இணைப்புகளில் உள்ள பெயர்களை மாற்றம் செய்ய வசதியாக தமிழகம் முழுவதும் மின் வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்தநிலையில் சிவகாசி கோட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் சிவகாசி டவுன் மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் அசோகன் எம்.எல்.ஏ., மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் கலந்து கொண்டு பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கு அதற்கான ஆணைகளை வழங்கினர்.
சாட்சியாபுரம் மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் யூனியன் துணைத்தலைவர் விவேகன் ராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உரிய பெயர் மாற்றம் செய்த ஆணைகளை வழங்கினார்.
பெயர் மாற்றம்
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி பாவநாசம் கூறியதாவது:- இந்த சிறப்பு முகாம் 30 நாட்கள் நடக்க உள்ளது. சிவகாசி கோட்டத்தில் மொத்தம் 20 ஆயிரம் பேர் பெயர் மாற்றம் செய்ய தயராக இருப்பதாக ஏற்கனவே தகவல் கொடுத்துள்ளனர். முதல் நாள் முகாமில் 56 மனுக்களை கொடுத்து உரிய ஆணைகளை பெற்றுக்கொண்டனர்.
மீதம் உள்ளவர்கள் இந்த முகாமினை பயன்படுத்திக் கொண்டு மின் இணைப்பு பெயர்களை மாற்றம் செய்து கொள்ளலாம். மின் வாரிய அலுவலகங்களிலேயே பெயர் மாற்றம் செய்ய தேவையான விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்து தரப்படுகிறது.
பதிவேற்றம் இலவசம்
எனவே பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆதாரங்களை மட்டும் மின் வாரிய அலுவலகத்துக்கு கொண்டு வந்து அலுவலக வேலை நாட்களில் வேலை நேரத்தில் இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
பதிவேற்றம் செய்தவர்களுக்கு உடனுக்குடன் அதற்கான ஆணைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.