< Back
மாநில செய்திகள்
இ.பி.எஸ் - க்கு எதிராக கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்த உத்தரவு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்
மாநில செய்திகள்

இ.பி.எஸ் - க்கு எதிராக கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்த உத்தரவு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்

தினத்தந்தி
|
28 Nov 2023 2:41 PM IST

கே.சி.பழனிச்சாமியின் அவதூறு வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை,

அ.தி.மு.க.வின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தன்னை பற்றி தெரிவித்த கருத்துகள் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கே.சி.பழனிச்சாமி சென்னை ஐகோர்ட்டில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் விசாரணையின் போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே, கே.சி.பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுகவில் இருந்து கே.சி.பழனிச்சாமியை நீக்கி பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த மனுவானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் கே.சி. பழனிச்சாமியின் அவதூறு வழக்கை தொடர்ந்து விசாரிக்க சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்திற்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகள்