< Back
மாநில செய்திகள்
3 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்கள்.?

கோப்புப்படம்

மாநில செய்திகள்

3 நாட்களுக்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்சு எச்சரிக்கை': எந்தெந்த மாவட்டங்கள்.?

தினத்தந்தி
|
21 Jun 2024 5:27 AM IST

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தென் மேற்கு பருவமழை கடந்த மாதம் (மே) இறுதியில் தொடங்கியது. பருவமழை தொடக்கத்தில் தீவிரமாக காணப்பட்டது. அதன் பின்னர், மழை குறைந்து அவ்வப்போது மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தென் மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய உள்ளது.

அதன்படி, தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 24-ம் தேதி (திங்கட்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமானது முதல் மிக கனமழை வரை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) முதல் 24-ம் தேதி (திங்கட்கிழமை) வரை 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதில் மிக கனமழை வரை பெய்யக் கூடிய நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்சு எச்சரிக்கையையும், கனமழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ள மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மிக கனமழையை பொறுத்தவரையில் 20 செ.மீ. வரை பதிவாக வாய்ப்பு உள்ளது. கனமழை என்பது 11 செ.மீ. வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மழை ஆங்காங்கே பெய்ய உள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரியில் 24-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பாகவும், இயல்பையொட்டியும் இருக்கும் எனவும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதேபோல், 24-ம் தேதி வரை மன்னார் வளைகுடா, அதனையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளிலும், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 35 கி மீ முதல் 55 கி மீ வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்