< Back
மாநில செய்திகள்
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்தார் ஓபிஎஸ்
மாநில செய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்தார் ஓபிஎஸ்

தினத்தந்தி
|
20 April 2023 8:22 AM IST

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளரை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னை,

கர்நாடகத்தில் மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க.வின் விருப்பம் பா.ஜ.க.வுக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வெளியான பா.ஜ.க. வேட்பாளர் இறுதிப்பட்டியல் அ.தி.மு.க.வுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் பா.ஜ.க. மீது அ.தி.மு.க. அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகளுடன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வாழும் புலிகேசி நகர் தொகுதியில் கர்நாடக மாநில அ.தி.மு.க. அவைத்தலைவர் டி.அன்பரசன் போட்டியிடுவார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளரை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் அறிவித்த அதே புலிகேசி நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்