விருதுநகர்
சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு
|சாத்தூர் அருகே ரெயில்வே தண்டவாளம் பகுதியில் மாற்றுப்பாதை அமைக்காமல் சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி,
சாத்தூர் அருகே ரெயில்வே தண்டவாளம் பகுதியில் மாற்றுப்பாதை அமைக்காமல் சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரெயில்வே கேட்
சாத்தூர் அருகே உள்ள குமராபுரம் கிராமம் சாத்தூர்-கோவில்பட்டி மெயின்ரோட்டில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இவர்கள் சாத்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு செல்ல குமாரபுரம் ரெயில்வே கேட்டை கடந்து தான் வர வேண்டும்.
மேலும் அருகில் உள்ள நல்லி ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அத்தியாவசிய பகுதிகளுக்கும் இந்த ரெயில்வே கேட் பகுதியை கடந்துதான் செல்ல வேண்டும்.
முற்றுகை போராட்டம்
இந்தநிலையில் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி குமாரபுரம் ெரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை ரெயில்வே நிர்வாகம் நேற்று தொடங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் தங்கள் ஊருக்கு செல்ல மாற்றுப்பாதை வழங்காமல் சுரங்கப்பாதை அமைத்தால் அனைவரும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும். ஆதலால் மாற்றுப்பாதையை அமைத்து கொடுத்து விட்டு, சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று குமாரபுரம் ரெயில்வே கேட் பகுதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பேச்சு வார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி ரெயில்வே போலீசார், ரெயில்வே துறை அதிகாரிகள், சாத்தூர் வருவாய்த்துறையினர், போலீசார் உள்ளிட்ட பலர் அப்பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் ரெயில்வே துறையினர் வேறு ஒரு பகுதியில் மாற்றுப்பாதை அமைத்து தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் இதனை கிராம மக்கள் ஏற்க மறுத்துவிட்டனர். அந்த பாதை வழியாக சென்றால் 4 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே தற்போது உள்ள லெவல் கிராசிங் அருகேயே மாற்று பாதையை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் பேசி உரிய தீர்வு காண்பது என ரெயில்வே அதிகாரிகளும், வருவாய்துறை அதிகாரிகளும் முடிவு செய்துள்ளனர்.