< Back
மாநில செய்திகள்
எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு... பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு... பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

தினத்தந்தி
|
16 Feb 2023 2:41 PM IST

கும்மிடிப்பூண்டியில் உள்ள சுடுகாட்டில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்த எரிவாயு தகன மேடை அமைக்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேருராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியின் 15 வார்டான மேட்டுகாலனி பகுதியில் உள்ள ஜெயஸ்ரீநகரில் ரூ.1 கோடியே 36 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் எல்.பி.ஜி. எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு தீர்மானம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு அதற்கான பணிகள் தற்போது பேரூராட்சி நிர்வாகத்தால் தொடங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அந்த பகுதியில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதே பகுதியில் பல தலைமுறையாக ஒரு சமூகத்தினரின் பயன்பாட்டில் மட்டுமே இருந்து வரும் சுடுகாட்டில் தற்போது பொது எரிவாயு தகன மேடை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு அந்த சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களை ஏற்கனவே நடத்தி உள்ளனர்.

இந்த பிரச்சினை குறித்து பொன்னேரி உதவி கலெக்டர் தலைமையிலான சமாதான பேச்சு வார்த்தை கூட்டம் நடந்து முடிந்த நிலையில், தற்போது மேற்கண்ட சுடுகாட்டில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை போலீஸ் பாதுகாப்புடன் பேரூராட்சி நிர்வாகத்தினர் நேற்று செயல் அலுவலர் யமுனா தலைமையில் மேற்கொண்டனர். எரிவாயு தகன எரிமேடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பொதுமக்கள் உள்ளே வராதபடி சுடுகாட்டின் வாசலில் இரும்பு தடுப்புகளை அமைத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இதனையறிந்து அங்கு வந்த கிராம மக்கள், போலீசாரிடம் வாக்குவாதம் செய்த நிலையில் இரும்பு தடுப்புகளை மீறி அவற்றை கீழே தள்ளி விட்டு சுடுகாட்டுக்குள் அதிரடியாக புகுந்து அங்கு நடைபெற்று கொண்டிருந்த பணிகளை பாதியில் நிறுத்தினர். மேலும் கட்டிட பணி அஸ்திவாரத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

இதன் பின்னர் பதட்டமான சூழ்நிலை உருவானதால் அதிகாரிகள், எரிவாயு தகன மேடைக்கான பணிகளை தற்காலிகமாக நிறுத்தினர். இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக சமாதானப்பேச்சு வார்த்தை கூட்டத்தை தாசில்தார் கண்ணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் நடத்தினர். அங்கு சென்ற பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். மேலும் சமாதானப்பேச்சுவார்தையின் போது பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாமல் கூச்சல், குழப்பம் நிலவியது.

இதனையடுத்து இரு தினங்களுக்கு பிறகு இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி தகவல் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து கிராம பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் நேற்று காலை முதல் மாலை 3 மணிவரை கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்