< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு
சிவகங்கை
மாநில செய்திகள்

திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு

தினத்தந்தி
|
16 Sep 2023 6:59 PM GMT

திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

விவசாய நிலத்தில் மதுக்கடை

திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தை அடுத்த வெளியாத்தூர் ஊராட்சியில் விவசாய நிலத்தில் புதிதாக மதுக்கடை வைப்பதற்காக கடை கட்டப்பட்டு திறப்பு விழாவிற்காக தயாராக இருந்தது. இதையடுத்து விவசாய நிலத்தில் மதுக்கடை புதிய கட்டிடம் கட்டக்கூடாது என்றும், இந்த பகுதியில் புதிய மதுக்கடை திறக்ககூடாது என்றும் சாத்தனூர், வெளியாத்தூர், கண்டரமாணிக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் தங்களின் எதிர்ப்பை மீறி மதுக்கடை திறந்தால் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

கிராம மக்கள் போராட்டம்

இந்நிலையில் நேற்று இந்த கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள், தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் மோகன், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாலு, ஒன்றிய துணை தலைவர் லெட்சுமணன், ஒன்றிய கவுன்சிலர்கள் நாராயணன், முருகேசன் உள்ளிட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திருப்பத்தூர் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் புதிதாக கட்டப்பட்ட மதுக்கடை முன்பு தரையில் அமர்ந்து அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்