< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றம்

தினத்தந்தி
|
14 Feb 2024 11:18 AM IST

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களையும் அ.தி.மு.க. ஆதரித்தது.

சென்னை,

தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று தொடங்கிய சட்டமன்ற நிகழ்வுகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 அரசினர் தனித் தீர்மானங்களை முன்மொழிந்தார்.


Live Updates

  • 14 Feb 2024 12:31 PM IST

    சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றம்

    சென்னை,

    தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தொடங்கிய சட்டமன்ற நிகழ்வுகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 அரசினர் தனித் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

    அதன்படி, 2026-ம் ஆண்டுக்கு பிறகு, மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று ஒரு தீர்மானமும், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதால், அந்த திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த கூடாது என்று மற்றொரு தீர்மானத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இதனைத்தொடர்ந்து 2 முக்கிய தீர்மானங்கள் மீது விவாதங்கள் நடைபெற்றன.

    இந்நிலையில் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். முன்னதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களையும் அ.தி.மு.க. ஆதரித்தது.

    நான்காம் நாளான நாளைய தினம் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேச உள்ளார். விடுமுறைக்குப் பிறகு வரும் 19ம் தேதியன்று 2024-25 ஆம் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். 20ம் தேதியன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். 

  • 14 Feb 2024 12:16 PM IST

    சட்டசபையில் முன்மொழியப்பட்ட 2 தீர்மானங்கள்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

    இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் தளி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க 2 தீர்மானங்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டுவைக்கும் செயல்” என்று அவர் கூறினார். 

  • 14 Feb 2024 12:15 PM IST

    சட்டசபையில் முன்மொழியப்பட்ட 2 தீர்மானங்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

    இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. சின்னதுரை “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க 2 தீர்மானங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்கிறது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மற்றும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு ஆகிய இரண்டும் பா.ஜ.க.வின் மிகப்பெரிய சதித்திட்டம். இரண்டு திட்டங்களையும் பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்” என்று அவர் கூறினார்.

  • 14 Feb 2024 12:08 PM IST

    சட்டசபையில் முன்மொழியப்பட்ட 2 தீர்மானங்கள்: வி.சி.க. வரவேற்பு

    இதுதொடர்பாக பேசிய வி.சி.க. சட்டப்பேரவை குழுத் தலைவர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள 2 தீர்மானங்களையும் வி.சி.க. கட்சி வரவேற்கிறது. மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது” என்று அவர் கூறினார்.

  • 14 Feb 2024 12:06 PM IST

    சட்டசபையில் முன்மொழியப்பட்ட 2 தீர்மானங்கள்: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு

    இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.. “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் மொழிந்துள்ள 2 தீர்மானங்களையும் வரவேற்கிறேன். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சங் பரிவார் கொள்கையை வெளிப்படுத்துகிறது;

    ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற தேர்தல் முறை நடைமுறைக்கு வந்தால் உள்ளாட்சி பிரச்சினைகளுக்கு முக்கியத்துவமின்றி தேசிய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்று அவர் கூறினார். 

  • 14 Feb 2024 12:04 PM IST

    சட்டசபையில் முன்மொழியப்பட்ட 2 தீர்மானங்கள்: வரவேற்பு

    “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த, 2 தீர்மானங்களையும் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களாக தமிழக வாழ்வுரிமை கட்சி கருதுகிறது” என்று சட்டசபையில் த.வா.க. தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கூறினார். 

  • 14 Feb 2024 12:02 PM IST

    சட்டசபையில் முன்மொழியப்பட்ட 2 தீர்மானங்கள்: கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வரவேற்பு

    இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன் எம்.எல்.ஏ., “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தீர்மானங்களையும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வரவேற்கிறது. இந்திய தலைமை தேர்தல் ஆணையரை பிரதமர் நரேந்திர மோடி நியமிக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் போராடி வருகின்றன” என்று அவர் கூறினார். 

  • 14 Feb 2024 11:48 AM IST

    ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறைக்கு எதிர்ப்பு: சட்டசபையில் தனி தீர்மானத்தை தாக்கல் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்“‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற தேர்தல் நடைமுறை ஜனநாயகத்திற்கு எதிரானது. நாடாளுமன்றத் தேர்தலை கூட ஒரே நேரத்தில் நடத்த முடியாது நிலை உள்ளது. அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானது.

    அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைத்து, மத்தியில் ஆட்சி கவிழுமானால், அனைத்து மாநிலங்களவையை கலைத்து விட்டு தேர்தல் நடத்துவார்களா..? சில மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ந்து தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் பதவி விலகுவார்களா?, இதைவிட காமெடி கொள்கை இருக்க முடியுமா? ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை முற்றிலுமாக நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒன்று.

    ஒரு நாடு ஒரு தேர்தல்' முறை என்பது எத்தகைய ஆபத்தானது என்பதை விளக்க விரும்புகிறேன், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை முற்றிலுமாக நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒன்று. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கும், அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது.

    ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன் கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதும், அப்படி கலைப்பது அரசியல் சட்ட துரோகம் என்பதாலும் இந்த நடைமுறையை நாம் எதிர்க்க வேண்டும்.

    நாடாளுமன்றத் தேர்தலை கூட ஒரே நாளில் இந்தியா முழுக்க நடத்துவதற்குத் தயாராக இல்லாத சூழல்தான் இப்பொழுது இருக்கிறது. இந்நிலையில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 30 மாநில சட்டமன்றத்திற்கும் தேர்வு நடத்துவது மாயாஜாலமா?” என்று தெரிவித்தார். 

    சட்டசபையில் முன்மொழியப்பட்ட 2 தனித் தீர்மானங்கள்

    முன்னதாக இன்று தொடங்கிய சட்டமன்ற நிகழ்வுகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 அரசினர் தனித் தீர்மானங்களை முன்மொழிந்தார். இதன்படி 2026-ம் ஆண்டுக்கு பிறகு, மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று ஒரு தீர்மானமும், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதால், அந்த திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த கூடாது என்று மற்றொரு தீர்மானத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

    இதுகுறித்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "அதிக தொகுதிகள் மூலம் ஆதிக்கம் செலுத்துவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்கும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை என்பது தென் மாநிலங்கள் மீது தொங்கும் கத்தியாகும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறையால் தமிழகம் பெரும் பாதிப்பை சந்திக்கும்.

    விகிதாச்சாரத்தின் படி பார்த்தால் தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை குறைந்து விடும். தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளை குறைக்க கூடாது. இந்தியக் கூட்டாட்சியில் எந்த மாநிலமும் உயர்ந்ததோ, தாழ்ந்ததோ கிடையாது.

    'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற தேர்தல் நடைமுறை கூட்டாச்சி தத்துவத்தை மீறும் செயல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைப்பது சட்டத்திற்கு எதிரானது. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற தேர்தல் நடைமுறை ஜனநாயகத்திற்கு எதிரானது

    நாடாளுமன்றத் தேர்தலுடன் 30 மாநில சட்டமன்ற தேர்தலையும் நடத்துவது சாத்தியமா..? உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம் என்பது மாநில சுயாட்சியை பறிக்கும் செயல். நாடாளுமன்றத் தேர்தலை கூட ஒரே நேரத்தில் நடத்த முடியாது நிலை உள்ளது. அது அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானது." என்று அவர் கூறினார்.

    தற்போது இந்த தீர்மானங்களின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடைபெற்று வருகின்றது. இதனைத்தொடர்ந்து அவை நிறைவேற்றப்பட உள்ளன.

    இதனிடையே தமிழ்நாடு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மேலும் செய்திகள்