தஞ்சாவூர்
கோவில் சுற்றுச்சுவர் இடித்ததற்கு எதிர்ப்பு; பணிகள் நிறுத்தம்
|கோவில் சுற்றுச்சுவர் இடித்ததற்கு எதிர்ப்பு; பணிகள் நிறுத்தம்
தஞ்சை திலகர் திடல் அருகே கோவில் சுற்றுச்சுவர் இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டன. மேலும் இந்து அமைப்பினர் கோவில் கட்டிடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விநாயகர்- அம்மன் கோவில்
தஞ்சை திலகர் திடல் அருகே தொப்புள் பிள்ளையார் கோவில், சியாமளாதேவி அம்மன் கோவில் ஆகிய 2 கோவில்கள் அருகருகே உள்ளன. இந்த கோவில் அருகே சாலை விரிவாக்க பணிக்காக மாநகராட்சி பணிகளை மேற்கொண்டது. அப்போது கோவிலின் சுற்றுச்சுவர் பொக்லின் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது.
இதனை பார்த்த அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள் அங்கு வந்து கோவில் பட்டா இடத்தில் தான் உள்ளது. மாநகராட்சி இடத்தில் இல்லை என கூறினர். அப்போது சாலை விரிவாக்க பணிக்காக மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள சுற்றுச்சுவர் மட்டும் தான் இடிக்கப்படுகிறது. கோவில் இடிக்கப்படவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவில் இடிக்கப்போவதாக தகவல்
இந்த நிலையில் கோவில் இடிக்கப்போவதாக தகவல் பரவியது. இதையடுத்து அந்த பகுதியில் இந்து அமைப்பினர், வணிகர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் இந்த கோவில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இதனை இடிக்க கூடாது என தெரிவித்தனர். இதையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டு பொக்லின் எந்திரம் அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டது.
மேலும் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசாரும் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் கோவில் இடிக்கப்படவில்லை என தெரவித்தனர். மேலும் கட்டிடத்தின் மீது போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் இறங்கி வருமாறு தெரிவித்தனர். இதையடுத்து அவர்களும் கட்டிடத்தில் இருந்து இறங்கினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.