வேற்றுமைகளை மறந்துவிட்டு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
|வேற்றுமைகளை மறந்து விட்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து இருக்கிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். மாநிலம் முழுவதும் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி நேற்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார். கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரீய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி பேசினார்கள்.
ஏற்புரை வழங்கி மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மக்கள் எனக்கிட்ட கட்டளையை ஏற்று முதல்-அமைச்சராக செயல்படும் நான், தி.மு.க.வின் தலைவராக செயல்படும் நான், மிகுந்த மகிழ்ச்சியோடு உங்கள் வாழ்த்துகளை ஏற்கிறேன். அண்ணாவை போல எனக்கு பேசத் தெரியாது. கருணாநிதி போல எனக்கு எழுத தெரியாது. ஆனால் அவர்களைப் போல உழைக்கத் தெரியும்.
அண்ணா உருவாக்கிய கட்சியை, கருணாநிதி கட்டி காத்த இயக்கத்தை எந்நாளும் நிரந்தரமாக ஆட்சி பொறுப்பில் வைத்திருப்பேன். ஏதோ நான் முதல்-அமைச்சராக இருக்க வேண்டும் என்பதற்காக இதை சொல்லவில்லை. இந்த இயக்கம் அதற்காக தோற்றுவிக்கப்பட்டது அல்ல.
திராவிட இயக்கத்தின் அரசியல் நடைமுறைகளின்படி தமிழ்நாட்டை கல்வி, சமூகத்தில் பொருளாதாரத்திலேயே முன்னேற்றி காட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இந்த இரண்டும்தான் நம்முடைய 2 லட்சியங்கள். இதற்காகத்தான் தி.மு.க. நிரந்தரமாக ஆட்சியில் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. மீதமுள்ள வாக்குறுதிகள் இன்னும் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்படும்.
இங்கே எனது ஜூனியர்களும், சீனியர்களும் என்னை வாழ்த்த வந்து இருக்கிறார்கள். இது எனது பிறந்தநாள் பொதுக்கூட்ட மேடையாக மட்டும் இல்லாமல், இந்தியாவின் புதிய அரசியலுக்கான தொடக்க விழா மேடையாக அமைந்திருக்கிறது. இது தான் எனக்கு மகிழ்ச்சி தருகிறது. ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்கள் அடிப்படையில் ஒருமித்த சிந்தனைகள் கொண்ட அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து செயல்பட தயார் என்று காங்கிரஸ் கட்சியின் தீர்மான கடிதத்தை எனக்கு பிறந்தநாள் பரிசாக மல்லிகார்ஜூன கார்கே 3 தினங்களுக்கு முன்பே அனுப்பிவைத்தார்.
காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தைதான் எனக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசாக கருதுகிறேன். இன்றைக்கு காலத்தின் மிகப்பெரிய தேவை 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட, யார் ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்பதற்கான தேர்தல் அது. ஒன்றுபட்ட இந்தியாவை வகுப்புவாத பாசிசத்தால் பிளவுப்படுத்தி, ஒற்றைத்தன்மை சர்வாதிகார சுயேட்சதிகார நாடாக மாற்ற நினைக்கக்கூடிய பா.ஜ.க.வை அரசியல் ரீதியாக வீழ்த்தியாக வேண்டும்.
பா.ஜ.க.வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் இதனையே ஒற்றை இலக்காக திட்டமிட்டு ஒன்றுசேர வேண்டும். அந்த ஒற்றுமை உணர்வு வந்துவிட்டாலே வெற்றிபெற்றுவிடலாம் என்று சொல்லிவிடலாம். மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து தேசிய அரசியலை தீர்மானித்தால் இழப்பு நமக்கு தான் என்பதை அனைத்து கட்சிகளும் உணர வேண்டும்.
இதனை காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளுக்கும் சேர்த்தே தான் சொல்கிறேன். தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகாலமாக நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு ஒற்றுமை என்ற அந்த அடிப்படை தான்.
தமிழ்நாட்டை போல ஒற்றுமையான கூட்டணியை அகில இந்திய முழுமைக்கும் அமையுங்கள் என்று சொன்னேன். அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கக்கூடிய வேறுபாடுகளை மறந்து, விட்டுக்கொடுத்து பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்று சேர வேண்டும். அதே நேரத்தில் காங்கிரஸ் இல்லாத கட்சிகளின் கூட்டணி என்று சிலரால் சொல்லப்படக்கூடிய வாதங்களை நிராகரிக்க வேண்டும். அது கரைசேராது. தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைத்து கொள்கிறோம் என்று சொல்வதும், நடைமுறைக்கும் சரியாக வராது.
அரசியல் கட்சிகள் எழுச்சி பெற வேண்டும், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை முறியடிக்க அரசியல் கட்சிகள் அவநம்பிக்கைகளை தாண்டி ஒன்றுபட வேண்டும். மூன்றாம் முன்னணி என்ற பேச்சு தேர்தலில் அர்த்தமற்றது. பா.ஜ.க.வுக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகளும், இந்த எளிய தேர்தல் கணிதத்தை புரிந்துகொண்டு ஒற்றுமையாக நிற்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துவிட்டு 4 ஆண்டுகளுக்கு முன்னால் அடிக்கல் நாட்டிவிட்டு இன்று வரை ஒரு செங்கலுக்கு மேல் வைக்காமல் தமிழ்நாட்டை கேவலப்படுத்தி கொண்டு இருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. மொத்தமே ரூ.12 கோடி தான் மதுரை எய்ம்ஸ்க்கு ஒதுக்கியிருக்கிறார்கள். இது 8 கோடி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் காரியம் அல்லவா?.
8 கோடி மக்களின் பிரதிநிதிகளால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 'நீட்' விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு நாட்களை கடத்த முடியும் என்றால், இது தனிப்பட்ட ஸ்டாலினை அவமானப்படுத்துவதாக தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
சமஸ்கிருதத்துக்கு கோடி கோடியாக பணம் ஒதுக்குவாய். சங்க தமிழுக்கு வெறுங்கையை நீட்டுவாய். அதனால் அவமானப்படுத்தப்படுவது யார்? திருவள்ளுவரும், இளங்கோவடிகளும் என தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள்.
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய ஒரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினோம். அதற்கு கூட இங்கே கவர்னராக இருப்பவர் ஒப்புதல் அளிக்கவில்லை. மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறது என்று நினைத்து, தடை செய்ய மறுக்கிறார்களா? நான் கேட்கிறேன். பா.ஜ.க. அல்லாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் இல்லை. முறையாக நிதிகளை வழங்குவது இல்லை. ஜி.எஸ்.டி.க்கு பிறகு நிதி உரிமைகள் மாநிலங்களுக்கு இல்லவே இல்லை. இழப்பீடுகளை உரிய காலத்துக்குள் தருவது கிடையாது.
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு எந்த பெரிய திட்டங்களும் கிடையாது. இப்படி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களோடு நிர்வாக யுத்தங்கள் நடத்தி கொண்டிருக்கிறது பா.ஜ.க.. இவர்களின் நீண்ட நாள் திட்டங்களை புரிந்து கொண்டு அதனுடன் கொள்கை யுத்தம் தொடுத்து கொண்டிருக்கிறோம் நாம். அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு தான் நடைபெற இருக்கிற நாடாளுமன்ற தேர்தல் களம். அந்த களத்தை நோக்கிய பயணத்துக்கு போர் வியூகங்கள் வகுக்கக்கூடிய பாசறை கூட்டமாக என் பிறந்தநாள் பொதுக்கூட்டம் அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
வருகை தந்துள்ள அகில இந்திய தலைவர்கள் இந்த தகவல்களை டெல்லிக்கு எடுத்து செல்லுங்கள். இந்திய துணை கண்டம் முழுமைக்கும் எடுத்து சொல்லுங்கள். ஒற்றுமையை வலியுறுத்துங்கள். வெற்றிக்கு அடித்தளமிடுங்கள். இப்போதே விதைப்போம். அடுத்த ஆண்டு மார்ச் என்பது அகில இந்திய அரசியலுக்கு அறுவடை காலமாக அமையட்டும்.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு எதிராக பா.ஜ.க. போர் தொடுத்து வருகிறது. 2024 பொதுத்தேர்தல் நமது சித்தாந்தப் போரில் வெற்றி பெற ஒரு வாய்ப்பு. நாம் ஒன்றுபட்டு வெற்றியை நோக்கி பயணிப்போம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தொண்டர்கள் அனைவருக்கும் வரலாற்று கடமை இருக்கிறது. புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி முழுமையான வெற்றியை பெற்றாக வேண்டும்.
தலைவர் கலைஞர் கருணாநிதி வழிநடத்திய காலத்திலே 2004-ம் ஆண்டு 40-க்கு 40 என்று வெற்றி பெற்றோம். கடந்த தேர்தலில் ஒரே ஒரு தொகுதியை இழந்தோம். அந்த ஒன்றுடன் சேர்த்து 40 தொகுதியையும் நம்ம அணி மீண்டும் கைப்பற்றியாக வேண்டும். அதற்காக இன்று முதல் கட்சி தொண்டர்கள் அனைவரும் உழைத்திட வேண்டும். அதுதான் நீங்கள் எனக்கு தரக்கூடிய பிறந்தநாள் பரிசாக இருக்கும். களம் நமக்காக காத்திருக்கிறது. நாற்பதும் நமதே, நாடும் நமதே.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இறுதியில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளி செங்கோலை பிறந்த நாள் பரிசாக வழங்கினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், இணை பொறுப்பாளர் ஸ்ரீவெல்ல பிரசாத், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்பட தி.மு.க. நிர்வாகிகளும், முதல்-அமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் மு.க.தமிழரசு, செல்வி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.