ஆளும் கட்சியை எதிர்க்கட்சி ஒரு போதும் பாராட்டாது: அமைச்சர் துரைமுருகன்
|எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றச்சாட்டை வைக்கின்றனரே என்று கேள்வி எழுப்பினர்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கும் இன்னும் இரு வாரங்களே உள்ளது. இதனால் தேர்தல் நெருங்குவதால், அதிமுக, திமுக கட்சிகள் ஈரோட்டில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றச்சாட்டை வைக்கின்றனரே என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், "ஆளும் அரசை எதிர்க்கட்சியினர் ஒரு போதும் பாராட்ட மாட்டார்கள்" என்றார். மேலும் அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், நான் சாபம் கொடுக்க தயாராக இல்லை" என்று பதிலளித்தார்.