நேரலை விவகாரம்: சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் அப்பாவு காரசார விவாதம்
|அ.தி.மு.க. ஆட்சியிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை நேரலை கொடுத்தது இல்லை என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
சென்னை,
தமிழகத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் 20-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து மார்ச் 21-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பதைக் கேட்க எதிர்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருப்பது இல்லை என கூறினார்.
அப்போது எழுந்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் பேசுவதை நேரலையில் வழங்குவதைப் போல் எதிர்கட்சி உறுப்பினர்களின் பேச்சுக்கள் மற்றும் கேள்விகளையும் நேரலையில் வழங்க வேண்டும் என்று கூறினார்.
அதற்கு சபாநாயகர், அ.தி.மு.க. ஆட்சியிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை நேரலை கொடுத்தது இல்லை என்றும், தற்போது கேள்வி நேரம் மட்டுமே நேரலை செய்யப்படுகிறது என்றும் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக அப்பாவு மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் தொடர்ந்த நிலையில், பிரச்சினைக்கு பேசி தீர்வு காணலாம் எனக் கூறி சபாநாயகர் அப்பாவு விவாதத்தை முடித்து வைத்தார்.