தி.மு.க. கூட்டணியில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம்
|மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியை தி.மு.க. ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை,
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது. தொடர்ந்து வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுடன் வரும் 12-ந்தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில், எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அந்த வகையில், மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியை தி.மு.க. ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில், "கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க.வின் கோட்டையாக கருதப்பட்ட பாபநாசம், மணப்பாறை ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மனிதநேய மக்கள் கட்சி வெற்றி வாகை சூடியது.
போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் மனிதநேய மக்கள் கட்சி வெற்றி பெற்றது. 'இந்தியா' கூட்டணியின் அங்கமான மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முழுவதும் கூட்டணியின் கருத்தியலை மக்களிடம் கொண்டு செல்வதில் முன்னிலை வகிக்கின்றது. எனவே, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியை தி.மு.க. ஒதுக்க வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது" என்று தெரிவித்தார்.