தஞ்சாவூர்
ஒப்பிலியப்பன் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு
|ஒப்பிலியப்பன் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடந்தது.
திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ஒப்பிலியப்பன் கோவில்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் கோவில் எனும் வெங்கடாசலபதி கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும்.
பூலோக வைகுண்டம், திருவிண்ணகர் என்றெல்லாம் ஒப்பிலியப்பன் கோவிலை பக்தர்கள் அழைக்கிறார்கள். இங்கு 14 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டது.
திருப்பணிகள்
அதன்படி திருப்பணிகள் ரூ.3½ கோடி செலவில் நடந்தன. இதில் கோவில் விமானங்கள், கோபுரங்கள், பிரகாரங்கள், சிறு சிறு சன்னிதிகள் புனரமைக்கப்பட்டன. திருப்பணி வேலைகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. கடந்த 25-ந் தேதி கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
நேற்று வெங்கடாசலபதிசாமி கோவிலுக்கும், வடக்கு வீதியில் எழுந்தருளி இருக்கும் ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலுக்கும் குடமுழுக்கு நடந்தது. இதை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. 8.20 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. அதன்பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்று 9.30 மணிக்கு கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது.
அமைச்சர்கள் பங்கேற்பு
குடமுழுக்கு விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அரசு தலைமை கொறடா கோவி. செழியன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், ரேகாராணி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவிடைமருதூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மாறன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர்.
விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) சாந்தா, கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.