சென்னையில் கருத்துகேட்பு கூட்டம்: மின்கட்டணத்தை உயர்த்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
|மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று சென்னையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்தனர்.
கருத்து கேட்பு கூட்டம்
தமிழக மின்சார வாரியம் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறது. கடன்களை தவிர்த்து விட்டு பொதுமக்களுக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலையில் தமிழக மின்சார வாரியம் இருக்கிறது. இதற்காக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மனு அளித்து உள்ளது.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் சார்பில் மின்சார கட்டணம் உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்தது. அதன் அடிப்படையில் கோவை, மதுரையை தொடர்ந்து, சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு ஆணையத்தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். இதில் உறுப்பினர் வெங்கடேசன், ஆணைய செயலாளர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆன்லைன் மூலமாக பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டன.
தொழில் நிறுவனங்கள் எதிர்ப்பு
இந்த கூட்டத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், சிறு குறு தொழில் நிறுவனங்களின் பிரநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை ஆவேசத்துடன் பதிவு செய்து பேசினர். 225 பேர் தங்கள் கருத்துகளை எழுத்துபூர்வமாகவும் அளித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் மின் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிவித்தனர். சிலர் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எத்தகைய மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டால் மின்கட்டணத்தை உயர்த்தாமல் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்றும் கருத்துகளை தெரிவித்தனர்.
வெளிப்படைத்தன்மை
மயிலாடுதுறை இறால் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் சங்கர் பேசும் போது, 'டீசல் விலை உயர்வால் தொழில் செய்ய முடியாத நிலை இருப்பதால் மின்சாரத்தை நம்பி தொழில் செய்து வருகிறோம். வாரியம் ஜனநாயக முறைப்படியும், வெளிப்படை தன்மையுடனும் இருக்க வேண்டும்' என்றார்.
அரக்கோணம், குருராஜபேட்டையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் பேசும்போது, 'விசைத்தறியை நம்பி வாழும் எங்களுக்கு மின்சார சலுகை அளித்து தொழிலை காப்பாற்ற வேண்டும். மின்திருட்டை ஒழிக்க சரியான சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனால் கட்டண உயர்வு நுகர்வோர் தலையில் போய் விழுகிறது' என்றார்.
தமிழகத்தை விட்டு வெளியேறும்
நுகர்வோர் பாதுகாப்பு பேரவை செயல் இயக்குனர் சீனிவாசன் பேசும்போது, 'மின்கட்டணம் செலுத்துவதில் பொதுமக்கள் எந்த தவறும் செய்வதில்லை. இதனால் அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் முதலில் 'ஸ்மாா்ட் மீட்டர்' பொருத்த வேண்டும்' என்றார்.
அம்பத்தூர் தொழில் பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, 'மின்கட்டண உயர்வு என்ற பெயரில் தொழில் நிறுவனங்கள் மீண்டும் நசுக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 6 சதவீத மின்சார கட்டண உயர்வு என்ற திட்டத்தை கைவிட வேண்டும். மின்கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும்' என்றார்.
மாசு இல்லாத உலகம்
காக்கழுரைச் சேர்ந்த சிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்திவரும் கே.பாஸ்கரன் பேசும்போது, 'செப்டம்பர் மாதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அழியும் என்பதால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு சலுகை வழங்க வேண்டும். மாசு இல்லாத உலகை படைக்க துணை மின்நிலையங்கள் அருகில் சூரிய சக்தி மின்சார நிலையங்களை அமைக்க வேண்டும்'என்றார்.
சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பொதுச்செயலாளர் நித்தியானந்தன் பேசும் போது, 'மதுரை, கோவை, சென்னையில் மட்டுமே கருத்து கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 5 லட்சம் தொழில் முனைவோர் உள்ளனர். அனைவருடைய நலன் கருதி 38 மாவட்டங்களிலும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். அதுவரை மின்கட்டணத்தை உயர்த்த வேண்டாம்' என்றார். தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பு தலைவர் சா.காந்தி, பா.ஜ.க. தொழில்துறை பிரிவு மாநில தலைவர் பா.கோவர்த்தனன் உள்ளிட்டோர் கோரிக்கை மனுவை ஆணையத்திடம் அளித்தனர்.