தமிழகம் முழுவதும் 5-ந்தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
|வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை,
அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற 5-ந்தேதி வெள்ளிக்கிழமை (அமாவாசை) மற்றும் 6-ந்தேதி சனிக்கிழமை, 7-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து பிற பகுதிகளுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 5-ந் தேதி வெள்ளிக்கிழமை, 415 பஸ்களும், 6-ந் தேதி சனிக்கிழமை 310 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை 7,350 பயணிகளும் சனிக்கிழமை 3,264 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 7,290 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் செல்போன் செயலி (ஆப்) மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.