செங்கோட்டை- புனலூர் வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கம்
|செங்கோட்டை- புனலூர் வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.
செங்கோட்டை,
செங்கோட்டை ரெயில் நிலையத்தின் வழியாக புனலூர் செல்லும்ரெயில்கள் அனைத்தும் இதுவரையில் நிலக்கரி மற்றும் டீசல் என்ஜினை கொண்டு மட்டுமே இயக்கப்பட்டன. இந்த பாதையை மின்பாதையாக மாற்றி மின்சார ரெயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
அதன் பேரில் செங்கோட்டை- புனலூர் பாதை மின்பாதையாக மாற்றப்பட்டது. தொடர்ந்து அந்த பாதையில் மின்சார என்ஜினை இயக்கி சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. பின்னர் ரெயில்வே துறை உயர் அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருந்தது.
இந்தநிலையில் செங்கோட்டை- புனலூர் வழித்தடத்தில் மின்சார ரெயில்களை இயக்க ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் அனுமதி அளித்தனர். அதனை தொடர்ந்து அந்த பாதையில் நேற்று முதல் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. கொல்லத்தில் இருந்து செங்கோட்டை வழியாக செல்லும் (வண்டி எண்) 16101 - 16102 -சென்னை கொல்லம் எக்ஸ்பிரஸ் நேற்று மாலை 3.20 மணிக்கு செங்கோட்டைக்கு வந்தது. இந்த ரெயில் மின்சாரம் மூலம் இழுக்கப்பட்டது.