< Back
மாநில செய்திகள்
சாவர்க்கர் பிறந்தநாளில் நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பது இந்திய மக்களுக்குச் செய்யும் அவமதிப்பு - திருமாவளவன்
மாநில செய்திகள்

'சாவர்க்கர் பிறந்தநாளில் நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பது இந்திய மக்களுக்குச் செய்யும் அவமதிப்பு' - திருமாவளவன்

தினத்தந்தி
|
26 May 2023 5:05 PM IST

இந்துத்துவா அமைப்புகளின் வெறுப்பு அரசியலுக்கு விதை போட்டவர் சாவர்க்கர் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28-ந்தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.

இந்நிலையில் சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறப்பதை கண்டித்து மே 28-ந்தேதி கறுப்பு நாளாகக் கடைபிடிப்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத சனாதன ஃபாசிசவாதி சாவர்க்கரின் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பாஜக அரசு திறக்கிறது. இது நாட்டுக்கு மிகப்பெரும் தலைகுனிவாகும். இதை கண்டிக்கும் வகையில் மே 28-இல் இல்லம் தோறும் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டும்; கறுப்பு உடையை அணிய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் வகையிலும் நாடாளுமன்றம் புதிய கட்டிடத்தை பிரதமரே திறக்கிறார். குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவரான குடியரசுத் துணைத் தலைவர் ஆகிய இருவரும் விழாவுக்கு அழைக்கப்படவில்லை. அது மட்டுமின்றி தீவிர சனாதன ஃபாசிசப் பற்றாளர் சாவர்க்கரின் பிறந்தநாளில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது திட்டமிட்ட உள்நோக்கத்துடன் கூடிய நடவடிக்கையே ஆகும். அரசியல் நேர்மையும் துணிவுமிருந்தால் "சாவர்க்கருடைய பிறந்த நாள் என்பதால் தான் இந்தநாளில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறக்கிறோம்' என்று பாரதிய ஜனதா கட்சி வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கமுக்கமான முறையிலே இந்த நாளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கே சாவர்க்கரின் மீது நன்மதிப்பு இல்லை என்பதே காரணமாகும். சாவர்க்கரின் பிறந்தநாளில் அவரைப் போற்றும் வகையில்தான் அந்த நாளில் திறக்கிறோமென வெளிப்படையாகத் தெரிவிக்க அவர்களுக்கே ஒரு தயக்கம் உள்ளதை அறியமுடிகிறது. அத்துடன், அவ்வாறு அறிவித்தால் ஜனநாயக சக்திகளிடமிருந்து அதற்கு கடுமையான எதிர்ப்பு வரும் என்கிற அச்சமும் ஒருபுறம் அவர்களை இவ்வாறு திருட்டுத்தனமாக செயல்பட வைக்கிறது.

ஏனெனில், இந்துத்துவா அமைப்புகள் தற்போது பின்பற்றும் வெறுப்பு அரசியலுக்கு விதை போட்டவர் சாவர்க்கர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை தனஞ்செய் கீர் என்பவர் எழுதியுள்ளார். அதில், சாவர்க்கரின் சிறு வயதில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றை அவர் குறிப்பிட்டுள்ளார். சாவர்க்கர் இருந்த ஊரில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும், சிறுவனாக இருந்த சாவர்க்கர் தன்னோடு மேலும் சில சிறுவர்களை சேர்த்துக்கொண்டு அந்த ஊரில் இருந்த மசூதிக்குச் சென்று கற்களை வீசித் தாக்கியதாகவும், அதில் மசூதியின் ஜன்னல் கண்ணாடிகளும், கூரையும் சேதம் அடைந்தது என்றும் அவர் எழுதியுள்ளார்.

அது மட்டுமின்றி பள்ளியில் சிறுவர்கள் சிலரை சேர்த்துக்கொண்டு அவர்களை முஸ்லிம் அணி, பிரிட்டிஷ் அணி, இந்து அணி எனப் பிரித்து அவர்களுக்குள் சண்டை செய்வதற்குப் பயிற்சி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். பேனா கத்தி, முள், குண்டூசி முதலானவற்றைக்கொண்டு பள்ளிக்கு வரும் முஸ்லிம் சிறுவர்களோடு அவர் சண்டை போட்டதாகவும் அதில் தனஞ்செய் கீர் தெரிவித்துள்ளார்.

சிறுவயதிலிருந்தே சிறுபான்மை மதத்தவர் மீது வெறுப்பும், குரோதமும் கொண்டவராகவும் வன்முறையின்மீது நம்பிக்கை கொண்டவராகவும் அவர் வளர்ந்திருக்கிறார் என்பது இதன்மூலம் தெரிகிறது. நாட்டில் மத நல்லிணக்கத்தை - மதசார்பின்மையை நிலைநாட்டுவதற்கு பாடுபட்டதால் மகாத்மா காந்தியடிகளை, சாவர்க்கரின் கருத்தியலால் ஈர்க்கப்பட்ட நாதுராம் கோட்சே என்பவன் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தான். அந்தப் படுகொலை வழக்கில் சாவர்க்கரின் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அது குறித்து நேருவுக்கு 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி சர்தார் பட்டேல் எழுதிய கடிதத்தில் மகாத்மா காந்தியடிகளின் கொலையில் ஈடுபட்டது சாவர்க்கரின் கீழ் இயங்கும் நபர்கள்தான் எனக் குறிப்பிட்டிருந்தார். நேரடியாக சாவர்க்கரின் கீழ் இருந்த இந்து மகாசபையின் வெறித்தனமான பிரிவுதான் சதித்திட்டத்தை தீட்டி அதை நிறைவேற்றியது" என அதில் அவர் எழுதியிருந்தார்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது அவர் பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு எழுதிய மன்னிப்புக் கடிதங்கள் புகழ் பெற்றவையாகும். ஜனநாயகத்தின் கோயில் என்று கருதப்படும் நாடாளுமன்றக் கட்டடத்தை இப்படியான ஒருவரது பிறந்தநாளில் திறப்பது இந்திய மக்களுக்குச் செய்யும் அவமதிப்பாகும்.

இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில்தான் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்படும் மே 28 ஆம் நாளன்று விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் இல்லந்தோறும் கறுப்புக்கொடி ஏற்றவேண்டும், கறுப்பு உடை அணியவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இதில் உடன்பாடு உள்ள ஜனநாயக சக்திகளும் தமது கண்டனத்தைப் பதிவு செய்திட முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்."

இவ்வாறு வி.சி.க. தலைவர் திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்