< Back
மாநில செய்திகள்
கண்ணன்கோட்டை ஏரியிலிருந்து முதல் முறையாக பூண்டிக்கு தண்ணீர் திறப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கண்ணன்கோட்டை ஏரியிலிருந்து முதல் முறையாக பூண்டிக்கு தண்ணீர் திறப்பு

தினத்தந்தி
|
11 Jun 2023 2:20 PM IST

கண்ணன்கோட்டை ஏரியிலிருந்து முதல் முறையாக பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரைக் கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட்டு வருகிறது. கோடை காலங்களில் இந்த ஏரிகள் வறண்டுவிடும் போதெல்லாம் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரிகளை ஒன்றிணைத்து ரூ.350 கோடியில் பிரமாண்ட அணை 3 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டி முடிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே உள்ள காடுகளில் உள்ள ஓடைகளிலிருந்து பாய்ந்து வரும் தண்ணீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது பூண்டி ஏரிக்கு ராட்சத குழாய்கள் வழியாக பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படுவது இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இதற்காக கண்ணன்கோட்டை ஏரியிலிருந்து ஊத்துக்கோட்டை அருகே உள்ள அம்பேத்கர்நகர் வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு சென்னை குடிநீர் வாரியம் மூலமாக குழாய்கள் அமைக்கப்பட்டது.

தற்போது கண்ணன்கோட்டை ஏரி முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு முதல் முறையாக கண்ணன்கோட்டை ஏரியிலிருந்து பூண்டி ஏரிக்கு ராட்சத குழாய்கள் மூலம் நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 40 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து தற்போது பூண்டி அருகே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கண்ணன்கோட்டை ஏரியிலிருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. நேற்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர்மட்டம் 27.77 அடியாக பதிவாகியது. 1.277டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 250 கனஅடி விதம் இணைப்பு கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்