பெரம்பலூர்
அரணாரையில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு
|பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரையில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறக்கப்பட்டது.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை பகுதியில் நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்புவிழா நேற்று நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அரணாரை உள்ளிட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்களை திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து அரணாரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நலவாழ்வு மையத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் ராதா, நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், வார்டு கவுன்சிலர் துரை.காமராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள். இதையடுத்து, நகர்மன்றத்தலைவர் அனைவருக்கும் லட்டுகளை வழங்கினார். விழாவில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.