அரியலூர்
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
|பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
அரியலூர் நகரில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோதண்ட ராமசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு பெருமாள் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் கோவில் வெளிப்பிரகாரத்தில் நம்மாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு பிரத்யேகமாக வைக்கப்பட்டு இருந்த மிகப்பெரிய கண்ணாடி எதிரே கோதண்ட ராமசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து ஆழ்வாரதிகள், மோட்ச சேவை மற்றும் திருவீதி உலா நடைபெற்றது.
இதேபோல் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெருமாளை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்ற கோஷத்துடன் சொர்க்கவாசல் வழியாக சென்று வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சொர்க்கவாசல் வழியாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
மீன்சுருட்டி
மீன்சுருட்டி அருகே குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத வீரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணியளவில் திருப்பள்ளி எழுச்சியும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 6.15 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்ற கோஷத்துடன் பெருமாளை வணங்கினர். கோவிலின் உள் பிரகாரத்தில் வீரநாராயண பெருமாள் வீதி உலா வந்து காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் நெல்லித்தோப்பு கிராமத்தில் உள்ள பள்ளி கொண்ட பெருமாள் கோவில், சம்போடை கிராமத்தில் சொர்க்க பள்ளத்தில் உள்ள வீரநாராயண பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து வந்தனர்.
தா.பழூர்
தா.பழூர் அருகே தாதம்பேட்டையில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள், பெருந்தேவி தாயார், ஆண்டாள் நாச்சியார், கருடாழ்வார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக ராஜ அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் உபய நாச்சிகளுடன் எழுந்தருளினார்.
அப்போது பக்தர்கள் நாராயணா... கோவிந்தா... என்று கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர். வரதராஜ பெருமாளுக்கு சகல உபச்சாரங்களும் செய்யப்பட்டு திரு பிரகாரச்சுற்று நடைபெற்றது. பக்தர்கள் பல்வேறு கீர்த்தனைகளை பாடி வழிபாடு செய்தனர். பின்னர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு பல்வேறு ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றது.
உடையார்பாளையம்
உடையார்பாளையத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணியளவில் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. இதையடுத்து 6 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் அதன் வழியாக சென்றார். இதையடுத்து பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர். இரவில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.