கள்ளக்குறிச்சி
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
|திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதி பெருமாள் கோவில்களில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
திருக்கோவிலூர்
சொர்க்கவாசல் திறப்பு
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு பூஜை, மண்டகப்படி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை 5 மணியளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் மண்டபத்தில் ஜீயர் சாமிகள் முன்னிலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேகளீசபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது அங்கே திரண்டு நின்ற பக்தா்கள் கோவிந்தா! கோவிந்தா! என கோஷம் எழுப்பிய படி பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி நேற்று அதிகாலையில் இருந்தே உள்ளூர் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த பக்தர்கள் கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதனால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நகராட்சி முழுவதும் ஆணையாளர் கீதா மேற்பார்வையில் துப்புரவு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு கிராமங்களில் இருந்து திருக்கோவிலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
கோவிந்தராஜ பெருமாள்
கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா! என கோஷம் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உட்பிரகாரத்தை 3 முறை வலம் வந்து தாயார் மண்டபம் முன்பு அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆதி திருவரங்கம்
மணலூர்பேட்டையை அடுத்த ஆதிதிருவரங்கம் கிராமத்தில் உள்ள ரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பகல் பத்து உற்சவம் முடிந்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஆழ்வார் எதிர்கொண்டு அழைக்க ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் வைகுண்ட வாசனாக எழுந்தருளி சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்தார்.
தொடர்ந்து மைய மண்டபத்தில் மூன்று முறை வலம் வந்து ஏகாதசி மண்டபத்தில் பக்தர்களுக்கு பெருமாள் அருள் பாலித்தார். இதில் ஆதி திருவரங்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வருகிற மாட்டுப் பொங்கல் வரை பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
வெங்கடேச பெருமாள்
சங்கராபுரம் மணிநதிக்கரை அருகே உள்ள அலமேலுமங்கை சமேத வெங்கடேசபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதையொட்டி வெங்கடேச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக்கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜையுடன் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் தேவபாண்டலம் சவுந்தரவல்லி நாயகி சமேத பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சங்கராபுரம் பகுதி குளத்தூர் தியாகராஜபுரம் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.