அரியலூர்
துணை தபால் அலுவலகம் திறப்பு
|துணை தபால் அலுவலகம் திறக்கப்பட்டது.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மேலணிக்குழி கிராமத்தில் 1947-ம் ஆண்டு கிளை தபால் நிலையம் இயங்கி வந்தது. இந்த தபால் நிலையம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது துணை தபால் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி அஞ்சல் துறை கண்காணிப்பாளர் சுவாதி மதுரிமா முன்னிலை வகித்தார். திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, துணை தபால் அலுவலகத்தை திறந்து வைத்து, செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், இந்திய அஞ்சல் துறையில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்பது ஏழை மக்களின் பெண் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த திட்டத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல இந்திய அஞ்சல் துறை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அஞ்சல் துறையில் தற்போது பல்வேறு தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு விரைவாகவும், பொதுமக்களுக்கு எளிதாகவும் பயன்படக்கூடிய வசதிகளை செய்து வருகிறது, என்றார். நிகழ்ச்சியில் துணை அஞ்சலக அலுவலர் செல்வமணி, கிளை அஞ்சலக அலுவலர் ராஜாமணி, உதவி கிளை அஞ்சலக அலுவலர் சங்கர், ஜெயங்கொண்டம் உதவி கண்காணிப்பாளர் வேல்முருகன், அஞ்சலக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.