பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
|பள்ளிகள் திறந்த பிறகு கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும், ஆண்டு இறுதித்தேர்வுகளும் நிறைவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படுவது வழக்கம். சில நேரங்களில், கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகம் காணப்படும்போது, பள்ளிகள் திறப்பு தள்ளப்போகும். நடப்பாண்டு, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ந்தேதி வெளியாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு ஜூன் 2-வது வாரம் வரையில் தள்ளிபோக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், தமிழகத்தில் 2024-2025-ம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 6-ம் தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பதற்கு முன்பு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பள்ளிகள் திறந்த பிறகு கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதில், பள்ளிகளில் திறந்தவெளி கிணறு இருக்கக்கூடாது. மின் சாதன பழுதுகள் இருந்தால் அவற்றை சரி செய்ய வேண்டும். உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய மரக்கிளைகள் இருந்தால் அவற்றை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். வகுப்பறைகள் கற்றல் சூழலுக்கு ஏற்ப தயாராக இருக்க வேண்டும். பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய பல்வேறு விஷயங்களை நுணுக்கமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.