கோயம்புத்தூர்
6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு
|காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.
அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி மற்றும் ஆதிதிராவிட பள்ளிகளில் கடந்த மாதம் காலாண்டு தேர்வு நடைபெற்றது. இதை தொடர்ந்து கடந்த 28-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன் காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 9-ந்தேதி பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினார்கள். இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-
முதல் பருவத்தேர்வு முடிந்ததும் காலாண்டு விடுமுறை விடப்பட்டது. இதற்கிடையில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி மற்றும் ஆதிதிராவிட மாணவ-மாணவிகளுக்கு தேவையான பாடபுத்தகங்கள், நோட்டு-புத்தகங்கள் தயார் நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. இதற்கிடையில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக பாடபுத்தகங்கள், நோட்டுக்கள்அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதை தொடர்ந்து நேற்று 6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. அந்த மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை தலைமை ஆசிரியர்கள் வழங்கினார்கள். 1 முதல் 5-ம் வகுப்பு வரை வருகிற 9-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அந்த மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுக்களும் பள்ளிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.