சேலம்
1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு பூக்கள் கொடுத்து குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு
|கோடை விடுமுறைக்கு பிறகு மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு பூக்கள் கொடுத்து குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு
கோடை விடுமுறைக்கு பிறகு மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பூக்கள் கொடுத்து குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடக்கப்பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அரசு அறிவிப்பின்படி 6 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கடந்த 12-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,390 தொடக்கப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. காலை 8 மணி முதல் அந்தந்த பள்ளிகளுக்கு மாணவ - மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர். பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் மாணவ, மாணவிகளுக்கு பூக்கள் கொடுத்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். சேலம் கிச்சிபாளையம் சிந்தி இந்தி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை லதா மற்றும் ஆசிரியர்கள் பள்ளி குழந்தைகளுக்கு பூக்கள் கொடுத்து வரவேற்றார்.
அழுது அடம் பிடித்த குழந்தைகள்
சில பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு கிரீடம் அணிவித்து வரவேற்றனர். நேற்று முதல் நாள் என்பதால் பலர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து சென்றனர். குறிப்பாக 1 மற்றும் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் நீண்ட விடுமுறைக்கு பின் பள்ளிகளுக்கு சென்றதால் ஒருவித அச்சத்துடன் காணப்பட்டனர். சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து அழுது அடம் பிடித்தனர்.
அப்போது பெற்றோர்கள் குழந்தைகளிடம் அன்பாக பேசி அவர்களுக்கு விருப்பமான தின்பண்டங்களை வாங்கி கொடுத்தனர். பல மாணவர்கள் பள்ளி வாகனங்கள் மூலமும், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலமும் உற்சாகமாக சென்றனர். வகுப்பறைக்கு சென்றதும் சிலர் சக மாணவர்களை பார்த்து சந்தோஷப்பட்டனர்.
புத்தகங்கள் வழங்கப்பட்டன
தொடர்ந்து அந்தந்த பள்ளிகளில் இறை வணக்க கூட்டம் நடைபெற்றது. அப்போது பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கினர்.
இதையடுத்து தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்றது. பள்ளி திறந்த முதல் நாள் அன்றே அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.