திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் 48 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு - விவசாயிகள் பயன் பெறலாம்
|திருவள்ளூர் மாவட்டத்தில் 48 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்து தங்களுடைய நெல்களை விற்பனை செய்து பயன் பெறலாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் நவரைப் பருவத்தில் 24 ஆயிரத்து 342 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் சராசரியாக ஒரு ஹெக்டருக்கு 6 மெட்ரிக் டன் வீதம் 1 லட்சத்து 46 ஆயிரத்து 52 மெட்ரிக் டன் மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு 59 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் வரவு எதிர்பார்க்கப்பட்டு முதற்கட்டமாக ஆர்.கே. பேட்டை, கடம்பத்தூர், பள்ளிப்பட்டு, திருவாலங்காடு, பூண்டி, திருத்தணி, எல்லாபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 8 வட்டாரங்களில் 48 இடங்களில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களை பயன்படுத்தி தேவைக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஆகியவற்றிற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்கின்ற நெல்களை குவிண்டால் ஒன்றுக்கு சன்னி ரக நெல் ரூ.2 ஆயிரத்து 160-க்கும் பொது ரக நெல் ரூ.2 ஆயிரத்து 115-க்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறலாம். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து தொடர்ந்து புகார்கள் எழும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் மீதும் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எந்த ஒரு விவசாயியும் தன்னுடைய அடங்கல் சான்றிதழை இடைத்தரகர்கள் மற்றும் வெளி வியாபாரிகளிடம் வழங்கினால் அந்த விவசாயிக்கு 2 வருடங்களுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய அனுமதி மறுத்து அரசு வழங்கும் எந்த ஒரு மானியத் திட்டங்களும் வழங்கப்பட மாட்டாது.
எனவே விவசாயிகள் அனைவரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்து தங்களுடைய நெல்களை எவ்வித சிரமமுமின்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.