< Back
மாநில செய்திகள்
புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடக்கம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடக்கம்

தினத்தந்தி
|
17 Dec 2022 12:11 AM IST

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது.

அரசு மருத்துவமனை

புதுக்கோட்டை நகரில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனை இயங்கி வந்தது. இந்த நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்ட பின் மருத்துவமனை அங்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வந்தனர்.

நகரின் மையப்பகுதியில் உள்ள பழைய அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு

முதற்கட்டமாக புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடக்க விழா பழைய அரசு மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். சிகிச்சை பிரிவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், 'இந்த மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''சிறைகளின் உள்ளே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்ட சிறைகளிலும், பெண்கள் சிறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது.

சிறைக்காவலர்கள் சீருடையில் கேமரா

சிறைக்காவலர்கள் சீருடையில் கேமரா பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து அதனை கண்காணிக்க வசதியும் உருவாக்கி, முதற்கட்டமாக 8 சிறைகளில் பரிசோதனை முயற்சி நடைபெறுகிறது. மதுரை மத்திய சிறையில் கடந்த ஆட்சியில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது'' என்றார். முன்னதாக நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், இணை இயக்குனர் (ஊரக நலப்பணிகள்) ராமு உள்பட மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பழைய அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் காலை 8 முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 3 முதல் 5 மணி வரையும் சிகிச்சை அளிக்கப்படும்.

மேலும் செய்திகள்