திண்டுக்கல்
6 இடங்களில் புதிய ரேஷன் கடைகள் திறப்பு
|திண்டுக்கல் புறநகர் பகுதியில் 6 இடங்களில் புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டது.
திண்டுக்கல் அருகே உள்ள சீலப்பாடியில், புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி தொகுதி எம்.எல்.ஏ.வுமான இ.பெ.செந்தில்குமார் தலைமை தாங்கினார். தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்து, பொருட்கள் விற்பனையை தொடங்கி வைத்தார்.
விழாவில் பொது வினியோக திட்ட துணைப்பதிவாளர் அன்புக்கரசன், கூட்டுறவு சார்பதிவாளர் செல்வக்குமார், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் பிலால் உசேன், ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சி, அவைத்தலைவர் காமாட்சி, மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசன், விவசாய அணி அமைப்பாளர் இல.கண்ணன் மற்றும் தி.மு.க. ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் ஆரோக்கியசாமி நகர், காப்பிலியபட்டி, வன்னியபட்டி, கோவுக்கவுண்டன்பட்டி, பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தராஜ் நகர் ஆகிய பகுதிகளிலும் புதிதாக ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன.