திருவள்ளூர்
வேலஞ்சேரி கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் திறக்கப்பட்டும் பலனில்லை - சேதம் அடைந்த கட்டிடத்திலே இயங்கும் அவலம்
|வேலஞ்சேரி கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் திறக்கப்பட்டும் பலனில்லை. சேதம் அடைந்த கட்டிடத்திலேயே இயங்குகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் வேலஞ்சேரி கிராமத்தில் இயங்கி வந்த ரேஷன் கடை பழுதடைந்தது. இதையடுத்து திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ. சந்திரன் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கு தனது தொகுதி நிதியில் இருந்து ரூ.15 லட்சத்து 25 ஆயிரம் ஓதுக்கீடு செய்தார். இதையடுத்து கூட்டுறவு வங்கி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே புதியதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதனையடுத்து புதிய ரேஷன் கடை கட்டிடத்தை எம்.எல்.ஏ. சந்திரன் கடந்த மார்ச் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
ஆனால் அதிகாரிகள் இன்னும் பழைய ரேஷன் கடையிலேயே தொடர்ந்து பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
வேலஞ்சேரி கிராமத்தில் உள்ள பழைய ரேஷன் கடை கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமென்டு பெயர்ந்து அடிக்கடி விழுகிறது. அத்துடன் கட்டிடத்துக்கான தூண்களிலும் சிமென்டு பெயர்ந்து, உள்ளே இருக்கும் கம்பிகள் வெளியில் தெரிகின்றன. மழை பெய்தால் நீர் ஒழுகி உள்ளே வந்து அரிசி உள்ளிட்ட பொருட்கள் வீணாகி விடுகிறது.
இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இடிந்து விழும் நிலை ஏற்படும். எனவே அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் புதிதாக கட்டியுள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.