< Back
மாநில செய்திகள்
பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணாபுரம் அணை நீர் திறப்பு; கொசஸ்தலை ஆற்றில் கரை புரண்டு ஓடிய வெள்ளம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணாபுரம் அணை நீர் திறப்பு; கொசஸ்தலை ஆற்றில் கரை புரண்டு ஓடிய வெள்ளம்

தினத்தந்தி
|
11 Dec 2022 11:32 AM GMT

பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

கிருஷ்ணாபுரம் அணை

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அருகே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அம்மபள்ளி கிராமத்தில் கிருஷ்ணாபுரம் அணை உள்ளது. இந்த அணை உள்ள பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணாபுரம் அணை முழுகொள்ளளவை எட்டியது. இதைத்தொடர்ந்து ஆந்திர மாநில நீர்ப்பாசன துறை அதிகாரிகள் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முடிவு செய்தனர். இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் போல் பாய்ந்து செல்லும். இதனால் ஆற்றங்கரையோரம் தமிழகத்தைச் சேர்ந்த பல கிராமங்கள் உள்ளதால் ஆற்றில் வெள்ளம் வருவது குறித்து தமிழக அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாலம் நீரில் மூழ்கியது

இதையடுத்து வருவாய்த்துறையினரும், போலீசாரும் உஷார் படுத்தப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 140 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த வெள்ளம் அதிகாலை 4.30 மணி அளவில் பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றுக்கு வந்து சேர்ந்தது.

இதனால் பள்ளிப்பட்டியில் இருந்து வெளியகரம் கிராமம் செல்லும் சாலையில் கொசஸ்தலை ஆற்றில் உள்ள பாலம் தண்ணீரில் மூழ்கியது. அதேபோல் நெடியம், சாமந்தவாடா ஆகிய பகுதிகளில் உள்ள பாலங்களும் தண்ணீரில் மூழ்கின.

இதையடுத்து இந்த பாலங்களின் இருபுறமும் தடுப்பை அமைத்து யாரும் ஆற்றில் இறங்காதவாறு வருவாய்த்துறையினர் எச்சரிக்கையாக காவல் புரிந்தனர். இதற்கான நடவடிக்கைகளை பள்ளிப்பட்டு தாசில்தார் தமயந்தி செய்தார்.

மேலும் செய்திகள்