< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு: கோவிந்தா... கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் பரவசம்...!!

தினத்தந்தி
|
23 Dec 2023 4:05 AM IST

தமிழ்நாடு முழுவதும் வைணவ ஸ்தலங்களில் இன்று சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீரங்கம்,

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த 12-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பகல்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று மோகினி அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக காலை 6 மணிக்கு நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் அங்கு மாலை 4.30 மணி வரை எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். தொடர்ந்து பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் பாசுரங்களை அரையர்கள் நம்பெருமாள் முன்பு அபிநயத்துடன் இசைத்தனர்.

மாலை 5 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 5.30 மணிக்கு ஆரியப்பட்டாள் வாசலை நம்பெருமாள் வந்தடைந்தார். பின்னர் திருக்கொட்டாரம் வழியாக வலம் வந்து இரவு 7 மணிக்கு கருடமண்டபம் வந்தடைந்தார். அங்கு ஆழ்வாராதிகள் மரியாதையாகி 8 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தை வந்தடைந்தார்.

இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியான இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா...கோவிந்தா..ரங்கா .... ரங்கா... என்ற கோஷங்களுகிடையே சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதற்காக உற்சவர் நம்பெருமாள் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து அதிகாலை 3.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து துலா லக்கனத்தில் புறப்பட்டு வெளியில் வந்தார்.

தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே மூன்றாம் பிரகாரத்திற்கு வந்த நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வந்தார். முன்னதாக விரஜாநதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்டருளினார். அதனைத்தொடர்ந்து காலை 4 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வருகிறார். அங்கு நம்பெருமாள் சுமார் 1 மணிநேரம் பக்தர்களுக்கு சேவை சாதிக்க உள்ளார்.

பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் காலை 7.30 மணிக்கு எழுந்தருளுவார். காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணிவரை பொதுஜனசேவை நடைபெறும். பின்னர் திருமாமணிமண்டபத்தில் இருந்து நம்பெருமாள் நள்ளிரவு 12 மணியளவில் புறப்பட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைவார்.

விழாவையொட்டி ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. சொர்க்கவாசல் திறப்பையொட்டி தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து சுமார் 2½ லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கோவில் அதிகாரிகளும், போலீசாரும், மாவட்ட நிர்வாகத்தினரும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து செய்து வருகின்றனர். பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல வேண்டிய வழிகளை தடுப்பு கட்டைகள் அமைத்து வரைமுறைப்படுத்தி உள்ளனர்.

பக்தர்கள் வரிசையில் நின்று கோவிலுக்குள் வரும் வழியில் மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை கோவில் வளாகம் மற்றும் வெளியில் நின்று பக்தர்கள் காணும் வகையில் எல்.இ.டி., எல்.சி.டி. டி.வி.க்கள் பொருத்தப்படுகின்றன.

பக்தர்கள் கூட்டத்தை கண்காணிக்க கோவிலின் உட்புறத்தில் முக்கிய இடங்களில் 120 கேமராக்களும், கோவிலை சுற்றி வெளிப்புறம், வாகனநிறுத்தும் இடம் என்று மொத்தம் 236 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் புறக்காவல் நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என்.காமினி தலைமையில், ஒரு டி.ஐ.ஜி, 11 போலீஸ் சூப்பிரண்டுகள், 14 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 40 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என்று 3,100 பேர் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்