< Back
மாநில செய்திகள்
தொடர் மழையால் வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் கல்பாக்கம்-புதுப்பட்டினம் பகுதியில் முகத்துவாரம் திறப்பு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

தொடர் மழையால் வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் கல்பாக்கம்-புதுப்பட்டினம் பகுதியில் முகத்துவாரம் திறப்பு

தினத்தந்தி
|
8 Nov 2022 4:14 PM IST

தொடர் மழையால் பக்கிங்ஹாம் கால்வாயில் ஏற்பட்ட நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுப்புர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கல்பாக்கம்-புதுப்பட்டினம், முட்டுக்காடு பகுதியில் முகத்துவாரம் திறக்கப்பட்டது. இதனால் 3,500 கனஅடி நீர் கடலில் சென்று கலந்து வருகிறது.

பக்கிங்ஹாம் கால்வாய்

சென்னையில் தொடங்கும் பக்கிங்காம் கால்வாய் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மரக்காணம் வரை செல்கிறது. மழைக்காலங்களில் சில நேரங்களில் நீர்வரத்து அதிகரித்து பக்கிங்ஹாம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுண்டு. இந்நிலையில் தற்போது பருவ மழை பெய்து வருவதால் சென்னை புறநகர் பகுதியில் தெற்கு பக்க பக்கிங்காம் கால்வாய் கடக்கும் கானத்தூர், முட்டுக்காடு, நெம்மேலி, கோவளம், வடநெம்மேலி, பட்டிபுலம், பேரூர், தேவனேரி, சாலவான்குப்பம், மாமல்லபுரம், மணமை, வெங்கப்பாக்கம், குன்னத்தூர், நத்தமேடு, சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம்-புதுப்பட்டினம் ஆகிய பகுதியில் பக்கிங்ஹாம் கால்வாயில் நீர் வரத்து அதிகரித்து கடல் போல் காட்சி அளிக்கிறது.

முகத்துவாரம் திறப்பு

இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருகில் உள்ள கிராமப்புற பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகுவதை தடுக்கும் வகையில் நீர்வளத்துறையின் கீழ் இயங்கும் ஆரணியார் வடிநிலை செங்கல்பட்டு கோட்டத்தின் சார்பில் முட்டுக்காடு, புதுப்பட்டினம் பகுதியில் முகத்துவாரத்தை திறந்து மழை நீரை கடலில் வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முட்டுக்காடு, கல்பாக்கம்-புதுப்பட்டினத்தில் உள்ள முகத்துவாரத்தை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திலீப்குமார் தலைமையில் பொதுப்பணித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் கடலுக்கும், பக்கிங்காம் கால்வாய்க்கும் இடையில் உள்ள கால்வாயை வெட்டி முகத்துவாரத்தை திறந்தனர்.

பொதுப்பணித்துறையினர் முகாம்

இதையடுத்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வரும் 3,500 கன அடி நீர் கடலில் கலந்து வருகிறது. இதனால் புதுப்பட்டினம், முட்டுக்காடு ஆகிய 2 முகத்துவார பகுதிகளில் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர்போல் அதிவேகத்தில் மழை நீர் கடலில் கலந்து வருவதை காண முடிந்தது.

இந்த நிலையில் அப்பகுதியில் நீர்வரத்து அதிகரிக்கப்பட்டதன் காரணமாக பொக்லைன் எந்திரத்துடன் 24 மணி நேரமும் பொதுப்பணித்துறையினர் அங்கு முகாமிட்டள்ளனர். முகத்துவாரம் திறக்கப்பட்ட முட்டுக்காடு, புதுப்பட்டினம் பகுதியில் தண்ணீர் சுழற்சியுடன் அதிவேகத்தில் கடலுக்கு சென்று கலப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு தூண்டில் போட்டு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்