< Back
மாநில செய்திகள்
ஊட்டி வேணுகோபால சுவாமி கோவிலில் வருகிற 29-ந் தேதி கும்பாபிஷேக விழா
நீலகிரி
மாநில செய்திகள்

ஊட்டி வேணுகோபால சுவாமி கோவிலில் வருகிற 29-ந் தேதி கும்பாபிஷேக விழா

தினத்தந்தி
|
26 Jun 2023 12:15 AM IST

ஊட்டி வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 29-ந் தேதி நடக்கிறது

ஊட்டி: ஊட்டி வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 29-ந் தேதி நடக்கிறது.

வேணுகோபால சுவாமி கோவில்

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரின் மையப்பகுதியான புது அக்ரஹாரத்தில் பிரசித்தி பெற்ற வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா வருகிற 29-ந் தேதி நடக்கிறது.

இதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.35 மணிக்கு லோயர் பஜார் பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணியர் கோவிலில் இருந்து புது அக்ரஹாரம் பகுதி வரை பெண்களால் மங்கள திரவியங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. பின்னர் மாலை 5 மணிக்கு பகவத் அனுக்ஞை, யஜமான சங்கல்பம், யாகசாலை பிரவேசம், வேதப்ரபந்த தொடங்கப்பட்டு முதல்கால யாகசாலை ஹோமம் நடைபெறுகிறது.

இதன்பின்னர் 28-ந்தேதி காலை 9.05 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. பகல் 2 மணிக்கு விசேஷ திருமஞ்சனமும், 3 மணிக்கு பஞ்சலோக பூஜை, தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்தப்படுகிறது. மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகம்

இதைத்தொடர்ந்து 29-ந்தேதி காலை 7.35 மணிமுதல் சிறப்பு பூஜைகளுடன் நான்காம் கால யாகசாலை பூஜைகளும், ஹோமங்கள், அக்னி மண்டல மஹா கும்பாதிகள் விஜர்சனம், யாத்ரா தானம் செய்யப்பட்டு கடம் புறப்படுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து காலை 10 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இந்த கும்பாபிஷேகத்தினை மாரியம்மன் கோவிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை அர்ச்சகர் விநாயகம் தலைமையில் வேணுகோபால சுவாமி கோவில் அர்ச்சகர் விஸ்வநாத் மற்றும் பட்டாச்சாரியர்கள் நடத்தி வைக்கின்றனர். பேரூராதினம் மருதாசல அடிகளார் முன்னிலை வகிக்கிறார்.

இதைதொடர்ந்து மஹா தீபாராதனை நடத்தப்படுகிறது.

பகல் 11.30 மணிமுதல் கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 3.05 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலை 5 மணிக்கு சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் செயல் அலுவலர் ராஜேஸ் மணிகண்டன், ஆய்வாளர் ஹேமலதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்