கோடநாடு பங்களாவில் சிறப்பு நிபுணர் குழு ஆய்வு செய்ய ஊட்டி கோர்ட்டு அனுமதி
|கொலை, கொள்ளை நடந்த கோடநாடு பங்களாவில் சிறப்பு நிபுணர் குழு ஆய்வு செய்ய ஊட்டி கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ல் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தனிப்படை போலீசார் 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தி உள்ளனர்.
இந்தநிலையில் கோடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சயானுக்கு சம்மன் அனுப்பப்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சமீபத்தில் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி. தரப்பில் வக்கீல் கனகராஜ், கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் உள்ளிட்டோர் ஆஜராகினர். அதேபோல் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர். கடந்த வழக்கு விசாரணையின் போது எதிர்தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயன் சம்பவம் நடைபெற்ற கோடநாடு பங்களாவை நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனுவிற்கு, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதற்கிடையே கோடநாடு பங்களாவை நீதிமன்றத்தின் மூலம் ஆய்வு செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை என அரசு வக்கீல் தெரிவித்தார். மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்றுக் கொண்ட மாவட்ட நீதிபதி, நிபுணர் குழு கோடநாடு பங்களாவை ஆய்வு செய்யலாம். அதனை முழுவதுமாக வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்., சாட்சியங்களை அழிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வருகிற மார்ச் 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.