காஞ்சிபுரம்
ஊராட்சிகள் சட்ட விதிகளை மீறியதாக கூறி ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரம் பறிப்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை
|ஊராட்சி மன்ற சட்ட விதிகளை மீறியதாக கூறி ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை பறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஊத்துக்காடு கிராம ஊராட்சி. இந்த ஊத்துக்காடு கிராம ஊராட்சி மன்றத்திற்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சாவித்திரி மணிகண்டன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஊராட்சி மன்றத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஊராட்சி மன்ற சட்ட விதிகளை மீறியபடி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வருவாய்த் துறையினர் பணிகளிலும் தலையிட்டு பிரச்சினையை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில் ஊராட்சி சட்ட விதிகளை மீறியதற்காக 1994-ம் ஆண்டு ஊராட்சி மன்றம் சட்ட விதிகள் 203-ன் படி ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மணிகண்டனின் ஊராட்சி மன்ற தலைவர் அதிகாரத்தை முடக்கி மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், ஊராட்சி மன்ற வரவு செலவு கணக்குகள் மற்றும் ஊராட்சி பணிகளை மேற்கொள்ள வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை பறித்து ஊராட்சி மன்றத்தை முடக்குவதாக மாவட்ட கலெக்டர் உத்தரவிட்ட சம்பவம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இதர ஊராட்சி மன்ற தலைவர்களிடம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.