கருணாநிதி குடும்பத்தினருக்கு மட்டுமே தி.மு.க.வில் தலைமை பொறுப்பு - எச்.ராஜா பேட்டி
|திராவிட மாடல் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளது என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
தமிழக பா.ஜ.க. பொறுப்புக்குழு தலைவர் எச்.ராஜா பிறந்தநாள் விழா காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
தி.மு.க.வில் 60, 70 வருடங்கள் உழைத்தவர்களுக்கு தலைமை பொறுப்பில் இடம் கிடையாது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குடும்பத்தினரை தவிர, வேறு யாருக்கும் தலைமை பொறுப்புகள் கிடையாது என்பதை பிரகடனப்படுத்தவே உதயநிதி ஸ்டாலினை துணை முதல்-அமைச்சராக நியமித்துள்ளனர்.
ஏற்கனவே அவர், சனாதன தர்மத்தை மலேரியா கொசு, டெங்கு போன்று ஒழிப்பேன் என கூறினார். பழனியில் நடந்த முத்தமிழ் முருகன் மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இது ஆன்மிக மாநாடு அல்ல என்றுதானே பேசினார். அப்படி என்றால் அவர் முருகனையும் ஏற்கவில்லை, இந்து மதம், இந்து கடவுளையும் ஏற்கவில்லை என்றுதான் அர்த்தம்.
கே. என். நேரு ஆன்மீகவாதி என்பதால் தி.மு.க.வில் அவருக்கு முக்கியத்துவம் இல்லை. திராவிட மாடல் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.