மயிலாடுதுறை
ஓதுவார் பணிக்கு தகுதியானவர்களையே நியமிக்க வேண்டும்
|கோவில்களில் ஓதுவார் பணிக்கு தகுதியானவர்களையே நியமிக்க வேண்டும் என மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவில்களில் ஓதுவார் பணிக்கு தகுதியானவர்களையே நியமிக்க வேண்டும் என மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓதுவார் பணி
தமிழக அரசு இந்துசமய அறநிலையத்துறை சார்பாக பணி நியமனம் செய்யப்பட்ட ஓதுவார்கள் சிலர் முழுநேரமாக முறையாக கற்று தேர்ந்தவர்கள் இல்லை என்பது ஊடக செய்திகள் வாயிலாக தெரியவருகிறது. இதனை முறையாக 5 ஆண்டுகள் பயின்று தேர்ச்சி பெற்றவர்களை பாதிக்கும்படி செய்யப்பட்ட தவறான நியமனமாக கருதுகிறோம். இது தவறான முன்னுதாரணம் ஆகும். 80 ஆண்டுகாலமாக தேவார பாடசாலை நடத்திவருகிறோம், பெரும்பான்மையான ஓதுவார்கள் அனைவரும் இங்கு பயின்றவர்களே என்கிற தார்மீக அடிப்படையில் அரசின் கவனத்திற்கு இவற்றை கொண்டுவருகிறோம்.
5 ஆண்டுகள் தேவார பாடசாலைகளில் பயின்றவர்களை மட்டுமே ஓதுவாராக முன்னர் பணிநியமனம் செய்துவந்தனர். அவர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்பட்டது. அதனை தளர்த்தி 4 ஆண்டுகள் பல்கலைக்கழகத்திலும், 3 ஆண்டுகள் இசைப்பள்ளியிலும் முழுநேரமாகப் பயின்றவர்களை நியமனம் செய்யப்பட்டனர். தற்போது இன்னும் குறைபாடுடைய வகையில் மாதம் ஒருவகுப்பு என 2 ஆண்டுகளில் 24 வகுப்பில் மட்டும் கலந்துகொண்டு பெற்ற சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது முறையான தேர்ந்த நியமனமாகாது. அது ஓதுவார் பணிக்கான பாடத்திட்டமும் கிடையாது.
தகுதியானவர்களையே...
தற்போது தேவாரபாடசாலைகள், பல்கலைக்கழகம், இசைப்பள்ளில் முழுநேரமாக அர்பணிப்போடு பயிலும் மாணவர்களின் எதிர்காலம் இதனால் பாதிக்கும். இத்துறைக்கு மாணவர்கள் சேர்வதும் குறையும். ஆகையால் திருக்கோவிலில் ஓதுவார் பணிக்குரிய தரமான தகுதியானவர்களையே நியமிக்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறோம்.மேலும் திருக்கோவில்களில் ஓதுவாமூர்த்தியாக பணி செய்வோருக்குரியவர்களை கண்ணியதோடு நடத்தல் வேண்டும். ஓதுவார் பணியினை தவிர வேறு பணிகளில் ஈடுபடுத்தி புனிதமான திருமுறைகளை ஓதும் நன்நெறியுடையவர்களை தரம் தாழ்த்துவதும் மாற்றப்பட வேண்டிய நடைமுறை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.