ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு 24 மணி நேரத்தில் பதில் தந்தது தமிழக அரசு
|ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் சட்ட மசோதா தொடர்பாக கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் தமிழக அரசு பதில் அனுப்பிவிட்டதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
அவசர சட்டம்
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளினால் பலரும் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் அவற்றைத் தடை செய்து, தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி, கடந்த மாதம் 1-ந் தேதி கவர்னர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தபோது, கவர்னர் ஆர்.என்.ரவி அன்றைய தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்தார்.
அதன்படி, அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை செய்யப்படுகின்றன; பணம் (அல்லது வெகுமதிகளை) வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாக கருதப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் (ரம்மி, போக்கர்) தடை செய்யப்படுகின்றன.
சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
இந்த நிலையில் அந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக நிரந்தர சட்ட மசோதா, தமிழக சட்டசபையில் தாக்கல் செய்து, நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் 28-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
அது நிலுவையில் இருந்தபோது, அதுபற்றி கவர்னரிடம் பேச சட்டத்துறை அமைச்சர் தரப்பில் கவனர்னரிடம் ஒரு வாரத்திற்கு முன்பு நேரம் கோரப்பட்டது.
கவர்னருக்கு 24 மணி நேரத்தில் பதில்
இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதினார். அவர் கேட்டுள்ள விளங்கங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அரசு பதில் அளித்துள்ளது.
இதுபற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று கூறியதாவது:-
அவசர சட்டத்தில் உள்ள அதே ஷரத்துகளைக் கொண்டுதான் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் 24-ந் தேதி காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் இருந்து கடிதம் வந்தது. அதில், கவர்னருக்கு அந்த மசோதாவில் ஏற்பட்டுள்ள சில சந்தேகங்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டு இருந்தது. விளக்கம் கேட்ட 24 மணி நேரத்திற்குள் சட்டத்துறை அதற்கான பதிலை தயாரித்து 25-ந் தேதி (நேற்று) காலை 11 மணிக்குள்ளாக கவர்னர் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தது.
'ஒப்புதல் எதிர்பார்க்கிறோம்'
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக கடந்த ஆட்சியில் நிறைவேற்றிய சட்டத்தை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துவிட்டது. ஆனால் அதற்கு பதிலாக புதிய சட்டத்தை இயற்ற அனுமதி அளித்தது.
என்னென்ன காரணங்களுக்காக அந்த சட்டத்தை ஐகோர்ட்டு ரத்து செய்ததோ, அதற்கு பதிலாக புதிய ஷரத்துகளை உள்ளடக்கி புதிய சட்டத்தை இயற்ற முற்பட்டிருக்கிறோம். புதிய சட்டத்துக்கான மசோதாவில் 3 கேள்விகளை கவர்னர் எழுப்பி இருக்கிறார். அவற்றுக்கு நாங்கள் தெளிவாக, விளக்கமாக பதில் அளித்திருக்கிறோம். இந்த விளக்கத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தருவார் என்று எதிர்பார்க்கிறோம்.
'ஒப்புதல் தந்தால் நல்லது'
அவசர சட்டத்தில் உள்ள அதே அம்சம்தான் சட்ட மசோதாவில் உள்ளது என்றாலும், அவசர சட்டத்துக்கு சந்தேகம் கேட்காமல் ஒப்புதல் அளித்தவர், சட்ட மசோதாவில் மட்டும் ஏன் சந்தேகம் கேட்க வேண்டும்? என்று நீங்கள் கேட்டால், அது அவருக்குத்தான் தெரியும்.
சட்ட மசோதா கொண்டு வரப்பட்டதால் அவசர சட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது கடந்த 2 நாட்களாக அதற்கான விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்துவதற்காக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பி இருக்கிறோம். இதுவரை நேரம் தரப்படவில்லை. தாமதப்படுத்தாமல் ஒப்புதல் அளித்தால் நல்லது என்று நினைக்கிறோம்.
இதுபோன்ற சட்டம் முன்னோடியாக உள்ளது. மற்ற மாநிலங்களில் தடை உத்தரவுகள் இருந்தால்கூட, இங்குதான் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த, பல்வேறு தரவுகளை ஆய்வு செய்து சட்டம் இயற்றப்படுகிறது.
மத்திய அரசு சட்டம் இயற்றுமா?
சமீபத்தில் நடைபெற்ற அகில இந்திய சட்டத்துறை அமைச்சர்கள் மாநாட்டில், ஆன்லைன் சூதாட்டத்தை மொத்தமாக தடை செய்யும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய சட்டத்துறை மந்திரியிடம் வலியுறுத்தினோம். அவர் பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.
இந்த விளையாட்டில் கோடிக்கணக்கான பணம் புரளுவதாலும், ஜி.எஸ்.டி. வரி அதிகம் வருவதாலும்தான் பல இடங்களில் இருந்து பல ரூபத்தில் தடைகள் வருவதாக நீங்கள் கூறுகிறீர்கள். எங்களைப் பொறுத்தவரை, இந்த சட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தால் மிகச் சிறப்பாக நிறைவேற்றி மக்களை காப்பாற்றுவோம்.
அவசர சட்டப்படி ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றால், அந்த அவசர சட்டத்தை அறிவிப்பாணையாக வெளியிடவில்லை. அதற்குள் சட்டசபை கூடியதால் சட்ட மசோதாவாக அதை நிறைவேற்றினோம். என்றாலும், குற்றம் செய்யும் நிறுவனங்கள் மீது ஏற்கனவே உள்ள சட்டங்களின்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். சட்டம் அமலுக்கு வந்த பிறகு தான், மசோதாவில் கூறப்பட்டுள்ள கண்காணிப்பு குழு உள்ளிட்ட குழுக்களை நியமிக்க முடியும்.
கவர்னருக்கே வெளிச்சம்
நாங்கள் விளக்கம் அளித்திருந்தாலும் நேரில் சந்திக்க கவர்னர் எங்களுக்கு நேரம் கொடுத்தால் அவரை சந்திப்போம். எதிர்க்கட்சி தலைவரை சந்திக்க நேரம் கொடுக்கிறார். ஆனால் சட்டத்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கொடுக்கவில்லையே ஏன்? என்று கேட்டால், அது கவர்னருக்கே தெரிந்த வெளிச்சம்.
இவ்வாறு அவர் கூறினார்.