நீலகிரி
சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகள் மட்டுமே கரைக்க அனுமதி
|விநாயகர் சதுர்த்தியையொட்டி, சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும் என்று கலெக்டர் அருணா தெரிவித்தார்.
ஊட்டி
விநாயகர் சதுர்த்தியையொட்டி, சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும் என்று கலெக்டர் அருணா தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
விநாயகர் சதுர்த்தி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களை, அதிகாரிகள் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். இதன்படி களிமண் உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம்.
நீர்நிலைகள்
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எனாமல், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
அதற்கு பதிலாக இயற்கை பொருட்கள், இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலைகளை ஊட்டி காமராஜ் சாகர் அணை, மசினகுடி மரவகண்டி அணை, செம்மநத்தம் ஆறு, நடுவட்டம் டி.ஆர்.பஜார் அணை, குன்னூர் லாஸ் நீர்வீழ்ச்சி, கோத்தகிரி உயிலட்டி நீர்வீழ்ச்சி, கூடலூர் இரும்பு பாலம், பந்தலூர் பொன்னானி ஆறு உள்ளிட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.