< Back
மாநில செய்திகள்
10 மாதங்களில் 24 புகார்களே வந்துள்ளன:போதைப்பொருட்கள் விற்பனை குறித்து தகவல் கொடுக்க தயங்கும் மக்கள்:ரகசியம் காக்கப்படும் என்று போலீஸ் உறுதி
தேனி
மாநில செய்திகள்

10 மாதங்களில் 24 புகார்களே வந்துள்ளன:போதைப்பொருட்கள் விற்பனை குறித்து தகவல் கொடுக்க தயங்கும் மக்கள்:ரகசியம் காக்கப்படும் என்று போலீஸ் உறுதி

தினத்தந்தி
|
2 July 2023 12:15 AM IST

தேனி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்களிடம் கடந்த 10 மாதங்களில் 24 புகார்களே வந்துள்ளன. மக்களிடம் தயக்கம் நிலவும் அதே நேரத்தில் ரகசியம் காக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

தேனி,

போதைப்பொருட்கள் விற்பனை

தேனி மாவட்டத்தில் கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டு கால கட்டத்தில் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தல் தொடர்பாக மொத்தம் 380 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 767 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 2 ஆயிரத்து 334 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

அத்துடன் 249 கஞ்சா வியாபாரிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் 132 பேர் என மொத்தம் 381 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. 10 பேரின் சொத்துக்களும் முடக்கப்பட்டன. கஞ்சா வியாபாரிகள் 85 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதுபோல், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

10 மாதத்தில் 24 புகார்

மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல், பள்ளி, கல்லூரி அருகில் போதைப் பொருட்கள், புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பான தகவல்களை பொதுமக்களிடம் இருந்து பெறுவதற்காக போலீஸ் துறை சார்பில் 93440-14104 என்ற செல்போன் எண் அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்டு மாதம் இந்த செல்போன் எண் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை இந்த எண்ணில் மொத்தம் 24 புகார்களே பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. அதில் 21 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன. மற்ற 3 புகார்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் மீது வந்தவை என்று விசாரணையில் தெரியவந்தது.

ரகசியம் காக்கப்படும்

இதேபோல், கடந்த 3 வாரங்களாக இந்த செல்போன் எண்ணுக்கு ஒரு புகார் கூட வரவில்லை. அதே நேரத்தில் மாவட்டத்தில் கஞ்சா, புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்த வண்ணம் உள்ளனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் புகையிலைப் பொருட்கள் விற்றதாக 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் ஒருபுறம் நடவடிக்கை எடுத்தாலும் மற்றொரு புறம் மக்களிடம் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு ஒத்துழைப்பு இல்லை என்று கூறப்படுகிறது. புகார் கொடுத்தால் பிரச்சினைகள் வந்த விடுமோ என்ற தயக்கமும், பயமும் மக்களிடம் காணப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, 'மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம். பயமோ, தயக்கமோ இன்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும்' என்றனர்.

மேலும் செய்திகள்