< Back
மாநில செய்திகள்
குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக பார்வையற்ற மாற்றுத்திறனாளியிடம் ரூ.3 லட்சம் ஆன்லைன் மோசடி
சென்னை
மாநில செய்திகள்

குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக பார்வையற்ற மாற்றுத்திறனாளியிடம் ரூ.3 லட்சம் ஆன்லைன் மோசடி

தினத்தந்தி
|
29 Dec 2022 4:48 PM IST

குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக கூறி பார்வையற்ற மாற்றுத்திறனாளியிடம், ஆன்லைன் மூலம் ரூ.3 லட்சம் மோசடி செய்த வழக்கில் 2 பெண்கள் உள்பட 3 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர்.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 38). பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம், பெண் ஒருவர் எனது செல்போனில் பேசினார். 1 சதவீதம் வட்டிக்கு கடன் கொடுப்பதாக தெரிவித்தார். அவரது பேச்சை நம்பி கடன் தொகை பெற முடிவு செய்தேன். கடன் தொகை கொடுப்பதற்கு முன்பணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று அந்த பெண் கூறினார். அதை நம்பி பல தவணைகளில் ரூ.3 லட்சம் வரை அந்த பெண் சொன்ன வங்கி கணக்கில் ஆன் லைன் மூலம் நான் அனுப்பினேன்.

ஒரு கட்டத்தில் அந்த பெண் செல்போனை 'சுவிட்ச் ஆப்' செய்துவிட்டார். சொன்னபடி எனக்கு கடன் தொகை எதுவும் தர வில்லை. நான் ஏமாற்றப்பட்டேன். இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார்.

அதன்பேரில் கூடுதல் கமிஷனர் லோகநாதன் மேற்பார்வையில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் பிரபாகரன், உதவி கமிஷனர் முத்து குமார், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த மோசடியில் டெல்லியைச்சேர்ந்த கும்பல் சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

தனிப்படை போலீசார் டெல்லி சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் தமிழகத்தைச்சேர்ந்த சாந்தி (37), வசந்தி (44) ஆகிய இரு பெண்களும் மற்றும் முனீஷ்சர்மா (44) என்பவரும் டெல்லி, உத்தம் நகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் இதுபோல் டெல்லியில் இருந்த படியே ஆன்லைன் மூலம் இந்தியா முழுவதும் ஏராளமான பேர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

வசந்தி, சாந்தி இருவருக்கும் இந்தி உள்பட பல மொழிகள் தெரியும். தமிழகத்தில் வசிப்பவர்களிடம் தமிழில் பேசி மோசடி செய்வார்கள். கைது செய்யப்பட்ட இவர்கள் 3 பேர்களும் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

புகார் கொடுத்த மாற்றுத்திறனாளி சரவணனிடம் மோசடி செய்த ரூ.3 லட்சம் பணமும் மீட்கப்பட்டது. இதற்காக போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலை நேரில் சந்தித்து, சரவணன் நேற்று நன்றி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்