சென்னை
'ஆன்லைன்' பகுதி நேர வேலைவாய்ப்பு மோசடி: சென்னையில் 5 பேர் கும்பல் கைது
|சென்னையில் ஆன்லைன் பகுதி நேர வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக ரூ.10 லட்சம் பணம் முடக்கப்பட்டது.
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 10-ந்தேதி புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கை நிறைய சம்பளத்துடன் பகுதி நேர வேலைவாய்ப்பு என்று 'வாட்ஸ்-அப்' காலில் வந்த அழைப்பை உண்மை என்று நம்பினேன். முதலில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கூறினார்கள். நான் அவர்கள் கூறிய 2 வங்கி கணக்குகளுக்கு ரூ.18 லட்சத்து 23 ஆயிரத்தை 'டெபாசிட்' செய்தேன். ஆனால் அந்த கும்பல் பணத்தை மோசடி செய்து விட்டது.' என்று கூறி இருந்தார்.
இந்த புகார் மனு குறித்து மத்திய குற்றப்பிரிவு 'சைபர் கிரைம்' போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் சென்னை நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த டார்லா பிரவீண்குமார் (32), அண்ணாநகர் கிழக்கு அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ராஜூ (40), அசோக்குமார் (33), பிரவீன்குமார் (31), வில்லிவாக்கதைச் சேர்ந்த வீரராகவன் (33) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இவர்கள் மோசடி செய்த பணத்தை மலேசியாவில் உள்ள கூட்டாளிகளுக்கு அனுப்பி வருவது தெரிய வந்துள்ளது. அவர்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் முடக்கப்பட்டது. இந்த வழக்கில் கைதானவர்கள் மீது இதே போன்ற மோசடி வழக்கு மும்பை, இஸ்லாபூர் போலீஸ் நிலையங்களில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. 'ஆன்லைன்' பகுதி நேர வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக ஏற்கனவே 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக 'சைபர் கிரைம்' போலீசார் தெரிவித்துள்ளனர்.