< Back
மாநில செய்திகள்
மாங்காட்டில் வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதாக போலீசுக்கு தகவல்; ஆன்லைனில் கடன் வாங்கியவரை சிக்க வைக்க நூதன முயற்சி
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

மாங்காட்டில் வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதாக போலீசுக்கு தகவல்; ஆன்லைனில் கடன் வாங்கியவரை சிக்க வைக்க நூதன முயற்சி

தினத்தந்தி
|
23 Dec 2022 6:08 PM IST

மாங்காட்டில் வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் ஆன்லைனில் கடன் வாங்கியவரை சிக்க வைக்க நூதன முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

வெடிகுண்டு தயாரிப்பு

மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று வந்த அழைப்பில் பேசிய நபர் ஜப்பானில் இருந்து பேசுவதாகவும் காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு முத்தமிழ் நகர் பகுதியில் கபீர் முகமது என்பவர் வெடிகுண்டு தயாரிப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இது குறித்து மாங்காடு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் அந்த முகவரியில் சோதனை செய்தனர்.

இதை பார்த்ததும் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மேலும் அந்த வீட்டில் விசாரித்த போது ஏற்கனவே கொலை வழக்குகளில் தொடர்புடைய வேறு ஒரு நபர் குடும்பத்துடன் வசித்து வருவது தெரியவந்தது.

கடன் வாங்கி விட்டு செலுத்தவில்லை

அந்த செல்போன் அழைப்பை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கபீர் முகமது என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக இந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்ததும், தற்போது புழல் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் கபீர் முகமதுவுககு கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவ சிகிச்சைக்காக இந்த முகவரியை பயன்படுத்தி ஆன்லைன் லோன் அப்ளிகேஷன் மூலமாக ரூ.58 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் இருந்துள்ளார்.

போலீசில் சிக்க வைக்க

இதன் காரணமாக ஆன்லைனில் கடன் வழங்கிய நிறுவனத்தினர் கபீர் முகமதுவை போலீசில் சிக்க வைப்பதற்காக வெடிகுண்டு தயாரிக்கும் வேலை செய்வதாக கூறியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஆன்லைனில் கடன் வாங்கும் நபர்களை மிரட்டும் வகையில் அவர்களது புகைப்படங்கள் மற்றும் குடும்பத்தினரின் புகைப்படங்களை அவதூறாக சித்தரித்து அவர்களது செல்போனில் உள்ள எண்களுக்கு அனுப்பி மன உளைச்சல் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆன்லைன் கடன் வழங்கும் நிறுவனத்தினர் கடன் வாங்கி செலுத்தாத நபரை போலீசில் சிக்க வைக்க வெடிகுண்டு தயாரிக்கும் தயாரிப்பதாக ஜப்பானில் இருந்து பேசுவதாக மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்