சேலம்
சேலத்தில் ஆன்லைன் மூலம் மோசடி: தனியார் நிறுவன ஊழியர் பறிகொடுத்த ரூ.1 லட்சம் மீட்பு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
|சேலத்தில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் தனியார் நிறுவன ஊழியர் பறிகொடுத்த ரூ.1 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர்.
சேலம்,
ரூ.99,978 மோசடி
சேலம் நரசோதிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 14-ந்தேதி ஒரு குறுந்தகவல் வந்தது.
அதில், உங்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எனவே, உங்களுக்கு அனுப்பியுள்ள லிங்கை கிளிக் செய்து அதில் உள்ள தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பேரில், முருகேசன், தனது வங்கி விவரங்களை அந்த எண்ணுக்கு பதிவு செய்து அனுப்பி வைத்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.99,978 எடுக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்தது.
வங்கி கணக்கில் திரும்ப சேர்ப்பு
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகேசன், இந்த ஆன்லைன் மோசடி குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், முருகேசனின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் மோசடியாக எடுக்கப்பட்ட பணம், தனியார் வங்கிக்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பாதிக்கப்பட்ட நபருக்கு திரும்ப கிடைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட வங்கியின் சட்டப்பிரிவுக்கு சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அவர்களிடம் பேசி ரூ.99,978-ஐ மீட்டு முருகேசனின் வங்கி கணக்கில் திரும்ப சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் மோசடியில் ஈடுபட்ட நபரை பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.