திண்டுக்கல்
சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்வு
|திண்டுக்கல்லில், மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் அதன் விலை மீண்டும் உயர்ந்து கிலோ ரூ.90-க்கு விற்பனையானது.
சின்ன வெங்காயம்
தமிழகத்தில் காய்கறிகள் அதிகமாக உற்பத்தியாகும் மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். திண்டுக்கல்லில் அனைத்து வகையான காய்கறிகளும் விளைகின்றன. இதனால் திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் காய்கறி மார்க்கெட்டுகளும், திண்டுக்கல்லில் வெங்காயத்துக்கு என்று தனியாக மார்க்கெட்டும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்-திருச்சி புறவழிச்சாலையில் மீனாட்சிநாயக்கன்பட்டியில் வெங்காய மார்க்கெட் உள்ளது. இங்கு வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் மார்க்கெட் நடக்கிறது. இதையொட்டி திண்டுக்கல் மட்டுமின்றி திருப்பூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை, நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து சின்ன வெங்காயம், பல்லாரி வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.
விலை உயர்வு
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக சின்னவெங்காயம் அறுவடை நடைபெற்றது. அதன்மூலம் மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிக அளவில் வந்தது. இதற்கிடையே சின்ன வெங்காயம் சீசன் முடிந்ததால், கடந்த சிலநாட்களாக வரத்து குறைந்து விலை உயர்ந்து வருகிறது. இதற்கிடையே நேற்று 3 ஆயிரம் மூட்டைகள் சின்னவெங்காயம் மட்டுமே வந்தது.
இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை நேற்று கடுமையாக உயர்ந்தது. கடந்த 4-ந்தேதி அதன் விலை கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்ற நிலையில் நேற்று ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை ஆனது. இதுவே சில்லரை கடைகளில் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்றது. கர்நாடகா, ஆந்திராவில் இருந்து சின்ன வெங்காயம் வந்தால் மட்டுமே இனி விலை குறையும் என்று வியாபாரிகள் கூறினர்.