கோயம்புத்தூர்
சின்ன வெங்காயம் விலை குறைந்தது
|கோவை மார்க்கெட்டுகளில் சின்ன வெங்காயம் விலை வெகுவாக குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோவை
கோவை மார்க்கெட்டுகளில் சின்ன வெங்காயம் விலை வெகுவாக குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
காய்கறி விலை உயர்வு
தமிழகத்தில் தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. காய்கறிகளின் விலையேற்றத்தை சமாளிக்க முடியாமல் இல்லத்தரசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தக்காளி விலை உயர்வு காரணமாக ஓட்டல்களில் தக்காளி சட்னி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது சாப்பாட்டு பிரியர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ளூர் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
சின்ன வெங்காயம் விலை குறைந்தது
மார்க்கெட்டுக்கு தினந்தோறும் சராசரியாக 110 சரக்கு லாரிகளில் காய்கறிகள் வருவது வழக்கம். ஆனால் இங்கு தற்போது 40 லாரிகள் மட்டுமே காய்கறிகள் வருகின்றன. மேலும் உள்ளூர் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதாலும், வெளியூர் காய்கறி வாகனங்களின் வரத்து குறைந்துள்ளதாலும் சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கியது. இதன்படி தக்காளி ரூ.140 வரையும், சின்னவெங்காயம் ரூ.200-யை தாண்டியும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் பெரியஅளவில் இல்லாததால், விவசாயிகள் மீண்டும் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். அதேபோல வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து சரக்கு லாரிகளில் காய்கறி வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.எனவே கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை குறைய தொடங்கி உள்ளது. தியாகி குமரன் காய்கறி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.170 ஆக இருந்தது. வரத்து அதிகரித்ததால் நேற்று சின்னவெங்காயம் கிலோவுக்கு ரூ.50 குறைந்து ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி ரூ.130-க்கு விற்பனை
ஆனால் தக்காளி விலை மட்டும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று நாட்டு தக்காளியின் விலை ரூ.10 அதிகரித்து தற்போது ரூ.130-க்கு விற்கப்பட்டு வருகிறது. ஆப்பிள் தக்காளி ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது. இஞ்சி தொடர்ந்து கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் சின்ன வெங்காயத்தின் விலை ஓரளவு குறைந்தபோதிலும், தக்காளியின் விலை அதிகரிப்பு பொதுமக்களை கவலைப்பட வைத்து உள்ளது.