கோயம்புத்தூர்
சின்ன வெங்காயம் விலையும் அதிகரிப்பு
|சின்ன வெங்காயம் விலையும் அதிகரிப்பு
கோவை
தக்காளியை தொடர்ந்து கோவையில் சின்ன வெங்காயம் விலையும் அதிகரித்து ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி, சின்னவெங்காயம்
கோவையில் கடந்த 4 நாட்களாக தக்காளி விலை கடுமையாக அதிக ரித்து வருகிறது. இது வீடு மற்றும் ஓட்டல் சமையலில் பெரும் தாக்கத் தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்ற தக்காளி கோவை டி.கே.மார்க்கெட்டில் நேற்று ரூ.80 முதல் ரூ.100 வரை விற்றது.
தக்காளி விலையை தொடர்ந்து கோவையில் சின்ன வெங்காயத்தின் விலையும் அதிகரித்து உள்ளது. கோவை டி.கே. மார்க்கெட்டில் கடந்த வாரம் கிலோ ரூ.60 வரை விற்ற சின்னவெங்காயம் நேற்று ரூ.20 வரை உயர்ந்து ரூ.80-க்கு விற்கப்பட்டது. தக்காளி, சின்னவெங்காயத்தின் விலை உயர்ந்து உள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
விலை அதிகரிப்பு
சின்னவெங்காயம் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதம் ரூ.25, ஏப்ரல் மாதம் ரூ.30, மே மாதம் ரூ.40, ஜூன் மாத தொடக்கத்தில் ரூ.60 என்று படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.80-க்கு விற்கப்படுகிறது. இதே போல் மிளகாய், அவரை, பீன்ஸ், புடலங்காய் ஆகியவற்றின் விலையும் அதிகரித்து உள்ளது.
கடந்த வாரம் ரூ.80 முதல் 90-க்கு விற்ற பச்சை மிளகாய் ரூ.120-க்கும், பீன்ஸ் ரூ.100 முதல் ரூ.120, கேரட் ரூ.80, பீட்ரூட் ரூ.40 முதல் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.20-க்கும், உருளைக்கிழங்கு ரூ.50, பாகற்காய் ரூ.50, கத்தரிக்காய் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சாகுபடி குறைந்தது
இது குறித்து டி.கே.மார்க்கெட் காய்கறி வியாபாரி அப்பாஸ் கூறுகையில், சமையலுக்கு தக்காளி, சின்ன வெங்காயம் தான் மிகவும் முக்கியமானது. எனவே அதை எப்போதும் கிலோ கணக்கில் வாங்கும் பொதுமக்கள் தற்போது ½ கிலோ, ¼ கிலோ என்று வாங்குகின்றனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பருவமழை காரணமாக தக்காளி, சின்னவெங்காயம், பச்சை மிளகாய் விலை வீழ்ச்சி அடைந்தது. எனவே கோவையில் பெரும்பாலான விவசாயிகள் தக்காளி சாகுபடி குறைத்தனர். இதுவும் வரத்து குறைவுக்கு காரணம் என்றார்.
Reporter Location : Coimbatore - Coimbatore