< Back
மாநில செய்திகள்
நீலகிரியில் சின்ன வெங்காயம் விலை உயர்வு
நீலகிரி
மாநில செய்திகள்

நீலகிரியில் சின்ன வெங்காயம் விலை உயர்வு

தினத்தந்தி
|
19 Oct 2023 12:15 AM IST

நீலகிரியில் சின்ன வெங்காயம், விலை உயர்ந்து வருகிறது. ஊட்டி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், முள்ளங்கி, உருளைகிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், மேரக்காய் உள்ளிட்ட காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதேபோல் சமவெளி பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், சின்ன வெங்காயம் நீலகிரிக்கு சரக்கு வாகனங்களில் உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 2 மாதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சரியான மழை இல்லாததால் வெங்காய சாகுபடி குறைந்தது. இதனால் நீலகிரிக்கு வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து வருகிறது.


கடந்த மாதம் இறுதியில் நீலகிரி மாவட்டம் ஊட்டி உழவர் சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டது. இதன்பின்னர் விலை மேலும் அதிகரித்து இந்த மாதம் 4-ந் தேதி ரூ.70, 6-ந் தேதி ரூ.75, 7-ந் தேதி ரூ.80, 8-ந் தேதி ரூ.85, 11-ந் தேதி ரூ.90 என விலை அதிகரித்து கொண்டே சென்றது. இந்தநிலையில் தற்போது உழவர் சந்தையில் கிலோ ரூ.95 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல் ஊட்டி மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.130-க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:- சின்ன வெங்காயத்தை பொருத்தவரை மைசூரில் இருந்து கொண்டு வரப்படும் சின்ன வெங்காயம் நீண்ட நாட்கள் தாக்கு பிடிக்காததால் நீலகிரி மக்கள் அதை வாங்குவது கிடையாது. இதனால் தமிழகத்தில் திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பகுதிகளில் விலையும் சின்ன வெங்காயம் தான் நீலகிரிக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. அதாவது வழக்கமாக நீலகிரி மாவட்டத்திற்கு 2,000 டன் வரை சின்ன வெங்காயம் கொண்டு வரப்படும் நிலையில் தற்போது 500 டன்தான் கொண்டு வரப்படுகிறது. அடுத்த மாதம் இன்னும் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.இதேபோல் முருங்கைக்காய், கத்தரிக்காய் உள்பட காய்கறிகள் விலையும் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்