< Back
மாநில செய்திகள்
சின்னவெங்காயம் விலை உயர்வு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

சின்னவெங்காயம் விலை உயர்வு

தினத்தந்தி
|
7 Oct 2023 7:52 PM GMT

தஞ்சையில் சின்னவெங்காயம் விலை மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. கிலோ ரூ.100-க்கு விற்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சையில் சின்னவெங்காயம் விலை மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. கிலோ ரூ.100-க்கு விற்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காய்கறி மார்க்கெட்

தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தஞ்சை மார்க்கெட்டிற்கு மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, பெரம்பலூர், அரியலூர், தேனி, சிவகங்கை, நிலக்கோட்டை, திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

மேலும் இங்கிருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், திருவையாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

வெங்காயம் விலை கடும் உயர்வு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. குறிப்பாக தக்காளி கிலோ ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. அதே போல் சின்ன வெங்காயமும் கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. தஞ்சை மார்க்கெட்டுக்கு பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த நிலையில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை சீசன் தொடங்கியதையடுத்து விலை குறையத்தொடங்கியது.

அதன்படி ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.40 வரை குறைந்தது. இந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் வரத்து தற்போது குறைவாக இருப்பதால் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதாவது நேற்று ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை உயர்வு காரணமாக விற்பனையும் குறைந்து காணப்பட்டது.

இல்லத்தரசிகள் அதிர்ச்சி

தஞ்சையில் நேற்று சின்னவெங்காயம் கிலோ ரூ.80-க் குவிற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.20 உயர்ந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து வரத்து குறைந்தாலும், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் விளைச்சல் குறைந்ததால் இந்த விலை உயர்வு காணப்படுகிறது. இந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட பல்லாரி நேற்று கிலோவுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து வெங்காய மொத்த வியாபாரி சிதம்பரம் கூறுகையில், தஞ்சைக்கு அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து தான் அதிக அளவில் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வரும். அங்கு தற்போது அறுவடை முடிந்து இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயம் தான் விற்பனைக்கு வருகிறது. இதே போல் பெங்களூருவில் மழை காரணமாக சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் அங்கிருந்து வரத்தும் குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரிக்க தொடங்கி விட்டது.

7 டன்னாக குறைந்தது

தஞ்சை மார்க்கெட்டுக்கு தினமும் 20 டன் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வரும். தற்போது 7 டன் அளவுக்கு தான் விற்பனைக்கு வருகிறது. இதனால் இந்த விலை உயர்வு காணப்படுகிறது. தீபாவளிபண்டிகை வரை விலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை. விலை அதிகரித்து வருவதால் சின்ன வெங்காயம் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.என்றார்.

மேலும் செய்திகள்